×

குருவாயூரப்பன் தலத்தில் கார்த்திகை ஏகாதசி பெருவிழா

நன்றி குங்குமம் ஆன்மீகம்

கேரள மாநிலத்தில் கோயில் உற்சவம் என்றால் கோலாகலப் பெருவிழாவாகத்தான் இருக்கும். பொதுவாக எல்லாத் திருவிழாக்களிலும் அலங்காரம் யானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. விழாக்காலம் முழுவதும் வாணவேடிக்கைகளும், வகை வகையான வாத்திய முழக்கங்களும், கேளிக்கையாட்டங்களும், பாரம்பரியப் பெருமை பேசும் கலைக் கூத்துக்களும் கண்ணுக்கும் செவிக்கும் விருந்து படைக்கின்றன.

ஒவ்வொரு ஆலயங்களிலும் வருடாந்திர பிரம்மோற்சவம் தவிர, அந்தந்த ஆலயங்களுக்கென்று அமைந்துள்ள திருநாட்களும் மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆறாட்டு விழா என்ற தீர்த்த வாரிக்குக் கேரளாவில் மட்டுமே சிறப்பிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டிய வீதியுலாக்களும், ஊர்வலங்களும் அந்தந்த வட்டாரத்தில் சரித்திரப்புகழ் பெற்று விளங்குகின்றன.

குருவாயூர்க் கோயிலில் நித்திய உற்சவம்தான் என்றாலும், மண்டல காலமும், வைகாச விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கேரளத்தில் மண்டல காலம் நவம்பர் மாதம் மத்தியில் தொடங்கி 41-நாட்கள் நீடிக்கிறது.மண்டல காலத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசி, ‘குருவாயூர் ஏகாதசி’ என்று பிரசித்த மடைந்துள்ள ஏகாதசி உற்சவம் மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.

அச்சமயம் பக்தர்கள் கூட்டம் ஆயிரக் கணக்கில் அதிகரிக்கிறது. மண்டல காலத்தில் பஞ்சகவ்ய அபிஷேகம் சிறப்பான அம்சமாகும். மண்டலத்தின் கடைசி நாள் பகவானுக்கு ‘களபம்’ என்ற சந்தனாபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் செய்யப்படும் இந்த அபிஷேகத்தைப் பரம்பரை பரம்பரையாக ஸாமோரின் ராஜ வம்சத்தினரே நடத்தி வருகின்றனர். ஏகாதசிக்குப் பதினெட்டு நாட்களுக்கு முன்பே உற்சவம் தொடங்கிவிடுகிறது. தினமும் ‘விளக்கு’ உண்டு அதாவது லட்சதீபம் போல் எல்லா விளக்குகளும் தீபஸ்தம்பங்களும் ஏற்படுகின்றன. பிராகாரத்தில், பல்வேறு வாத்தியங்களின் நாத வெள்ளத்தில் யானைகளின் ஊர்வலம் மிதந்து செல்கிறது.

குருவாயூருக்கு ஸ்ரீகிருஷ்ண விக்கிரகம் வந்தது ஒரு நீண்ட வரலாறு.குருவாயூரிலுள்ள மூல விக்கிரகம் ஸ்ரீமந் நாராயணனுடைய திவ்விய வடிவமே! அவரே வழிபட்டது. பத்ம கல்பத்தின் தொடக்கத்தில் அவர் அதை பிரம்ம தேவனுக்கு அளித்தார். பிறகு வராக கல்பத்தின் தொடக்கத்தில் சுதபர் தம்பதிகளுக்கு அளித்து, அவரைப் பூஜித்து வரும்படி அருளினார். அத்தம்பதி அவ்வாறே செய்தனர். அதன் பலனாக மகாவிஷ்ணுவே அவர்கள் முன்தோன்றினார்.

தங்களுக்கு ஒருமகன் பிறக்க வேண்டும் என்று சுதபர் தம்பதி பரந்தாமனிடம் மும்முறை வேண்டினர். மும்முறையும் ஸ்ரீமகாவிஷ்ணு ‘அப்படியே நானே உங்களுக்கு மகனாகப் பிறக்கப் போகிறேன். மூன்று ஜென்மங்களிலும் இந்த கிருஷ்ண விக்கிரகத்தை ஆராதிக்கும் பாக்கியத்தையும் நீங்கள் பெறுவீர்கள்!’ என்று வாழ்த்தியருளி மறைந்தார்.

அவ்வாறே, அவர்களுக்கு ‘பிருஸ்னி கர்ப்பன்’ என்ற மகன் பிறந்தான். அதற்கு அடுத்த பிறவியில் இத்தம்பதியரே காச்யப்பராகவும் அதிதியாகவும் ஆனார்கள். அவர்கள் இந்த விக்கிரகத்தைப் பூஜித்ததன் பலனாக வாமனர் பிறந்தார். காச்யப்பரும் அதிதியும் மறுபிறவியில் வசுதேவர், தேவகியானார்கள்.

அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார். கம்சவத்திற்குப் பின்னர், கிருஷ்ண பகவான் துவாரகையில் குடியேறினார். அங்கு ஒரு அழகிய ஆலயத்தை உருவாக்கித் தங்கள் பெற்றோர் மறைவிற்குப் பிறகு ஸ்ரீமந் நாராயண வடிவத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இது தேவகியால் ஆராதிக்கப்பட்ட பின்பு அதே விக்கிரகம் ருக்மணி தேவியால் பூஜிக்கப்பட்டது.

அவதார காரியம் முடிந்து பகவான் கிருஷ்ணர் ஸ்ரீவைகுண்டம் திரும்பும் வேளை வந்தது. அச்சமயத்தில் தமது பிரதான சீடரான உத்தவரை அருகில் அழைத்து ‘சுவர்க்காரோகணம்’ ெசல்லும் செய்தியைக் கூறினார். கேட்டதும் உயிருக்குயிராகப் பழகிய உத்தவர் பெருந்துயரத்தில் ஆழ்ந்து விட்டார், ‘‘மகா பிரபு! நீங்கள் இல்லாமல் இந்தக் கலியுகத்தில் பூலோக வாசிகள் எல்லாரும் விவரிக்க முடியாத இன்னல்களும் ஆளாக நேரிடுமே! சுவாமி, அதற்கு எப்படி நிவாரணம் அளிக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டு வேதனையுற்றார்.

அவரை அரவணைத்துத் தேற்றியவாறு பகவான் கிருஷ்ணர், ‘‘உத்தவரே! கவலைப்பட வேண்டாம். இந்த விக்ரகத்தில் நான் என்றென்றும் வாழ்வேன். என் பக்தர்களுக்கு அருள் புரிந்த வண்ணம் இருப்பேன். கலியுகத்தின் கொடுமைகளைக் களைந்தெறிவேன். இன்னும் சில நாட்களில் துவாரகை பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடும். இந்த விக்கிரகத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதை குரு பகவான், வாயு பகவான் இருவரிடமும் கொடுத்து பரசுராம க்ஷேத்திரம் எனப்படும் மலையாள தேசத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்லுங்கள்!’’ என்று கூறிவிட்டுச் சென்றார். உத்தவர் பகவானுடைய ஆணையை தேவ குருவான பிரகஸ்பதியிடம் தெரிவித்து, விக்கிரகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டு பத்ரிகாச்ரமம் சென்று தவத்தில் அமர்ந்தார் உத்தவர்.

தேவ குருவான பிரகஸ்பதியும் வாயு பகவானும் விக்கிரகத்துடன் ஆகாயமார்க்கத்தில் சஞ்சரித்து மேற்குக் கடற்கரை யோரத்தை அடைந்தனர். அங்கே பூர்வத்தில் பிராசேதஸ்ஸூகள், ஹர்யச்வர்கள், சபலாச்சவர்கள் ஆகிய தேவர்கள் ‘ருத்ரகீதம்’ பாடித் தவம் புரிந்த ருத்ர தீர்த்தம் எனப்படும் நாராயண ஸரஸை அடைந்தார்கள். அங்கு ஸ்ரீபரமேஸ்வரனை தரிசனம் கண்டு நமஸ்கரித்தார்கள். அவரும் அந்தத் தடாகத்தின் தென்கரையில் அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்யும் படி ஆணையிட்டார்.

‘‘இந்த பகவத் பிரதிஷ்டைக்குக் காரணமாக குருவையும், வாயுவையும் என்றென்றும் மறக்க முடியாதபடி ‘குருவாயூர்’ என்று இந்த க்ஷேத்திரம் மகோன்னதம் அடையும்’’ என்று ஆசீர்வதித்தார். இவ்விதம் குருபகவான், வாயு பகவான் ஆகிய இருவரால் பிரதிஷ்டிக்கப்பட்ட இந்த மூர்த்தியைக் கொண்ட இந்த திவ்ய க்ஷேத்திரம் ‘பூலோக வைகுண்டம், தட்சிண துவாரகை என்றும் பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ண விக்கிரகம் பிரதிஷ்டை செய்த நாள் முதற்கொண்டு கார்த்திகை சுக்ல ஏகாதசிப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கார்த்திகை ஏகாதசித் திருநாளன்று நாரத மகரிஷியுடன் ஆகாய மார்க்கமாகச் சென்ற ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் (கி.பி.820) குருவாயூர்க் கோயிலுக்கு வந்து 41-நாட்கள் தங்கிப் பூஜை முறைகளையெல்லாம் மேலும் சிறப்பாக வகுத்துத் தந்து விட்டுச் சென்ற அந்த கார்த்திகை சுக்ல ஏகாதசி திருநாளன்றுதான் குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனன், கிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனம் கண்ட நாளும், கீதோபதேசம் பெற்ற நாளும் என்றுதான் கிருஷ்ண பரமாத்மா இந்திரனின் சீற்றத்திலிருந்து கோகுல வாசிகளைக் காப்பாற்ற கோவர்த்தன கிரியை குடையாய்த் தூக்கி திருநடனம் புரிந்த நாளும் குருவாயூர் ஆலய கார்த்திகை சுக்ல ஏகாதசி திருநாளோடு ஒத்துப் போகிறது. இதனால் கர்வ பங்கம் செய்யப்பட்ட இந்திரன், காம தேனுவுடன் கார்த்திகை சுக்ல ஏகாதசியன்று ஒவ்வொரு வருடமும் வருகை தந்து பகவானுக்கு விலை மதிப்பில்லாத செல்வங்களை அளித்து வழிபடுவதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீகுருவாயூர் கிருஷ்ணர் மீது ஆதிசங்கரருக்கு அளவற்ற பிரேணம் எப்படி ஏற்பட்டது? அது ஒரு கதை!

கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசிப் பெருவிழா குருவாயூரில் பன்னெடுங்காலம் முதல் இன்று வரை உற்சவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. மற்றெல்லா உற்சவங்களைவிட இதற்கு மிகவும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரதான விழாவே இதுதான். அந்த தினத்தில் குருவாயூரப்பனை ஆராதிக்க தேவர்களும் முனிவர்களும் வந்து கூடுவார்களாம். அந்த மகோற்சவத்துக்கு எண்ணற்ற பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேருகிறார்கள்.

இப்படி வருகிற பக்தர்கள் கூட்டத்தில் தேவர்களே மனித ரூபத்தில் வருவதாக பெரியோர்கள் சொல்கிறார்கள். ஒரு சமயம் இந்த கார்த்திகை சுக்ல ஏகாதசிப் பெருவிழாவின்போது பக்தர்களுடைய ருசிக்கு தகுந்தபடி, பஜனை, நாம சங்கீர்த்தனம், புராணபடனம், ஹரிகதாகால க்ஷேபம், ஸப்தாகமம், கிருஷ்ணனாட்டம் என்று பல அற்புதமான கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். அது சமயம் பகவானுடைய விக்கிரகத்தை யானை மேல் ஏற்றி பிராகார வலம் வந்தார்கள். அதுதான் சீவேலி எனப்படும்.

குருவாயூரப்பனின் லீலா விநோதங்களைப் பற்றி ஆதிசங்கரர் சிறிதும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அதனால் குருவாயூரப்பன் தனது அவதார ரகசியத்தை உணர்த்த எண்ணினார். ஆகாயத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஆதிசங்கரரை சீவேலி ஊர்வலத்திற்கு முன்னால் மயக்க நிலையில் வந்து விழச் செய்தார். ஆச்சாரிய சுவாமிகள் பெரிய மகானாக இருந்த போதிலும் பகவானுடைய மாயா சக்தியை தடுத்து நிறுத்த சக்தியில்லாமல் கீழே விழுந்தார்.

விழித்தவுடன் தன் உணர்வு வரப் பெற்றவர் எழுந்தார். அப்போது இந்த அதிசயமான சந்தர்ப்பத்தைப் பற்றி ஞானக் கண்ணினால் தெரிந்து கொண்டு, இதெல்லாம் மாயக் கிருஷ்ணனுடைய லீலா விலாசம் என்று தெரிந்து கொண்டு, உடன் ஆச்சார்ய சுவாமிகள் குருவாயூரப்பன் சந்நிதியை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

அச்சமயம் திவ்ய மங்கலம் போல அவருடைய காதுகளில் ‘‘சித்த அடைந்து இருக்கும் ஆச்சார்யரே’’. பகவத் கீதை பாஷியத்தைச் செய்து ஸத்ஜனங்களுடைய மதிப்பைப் பெற்று புண்ணிய சீலராக இருக்கும் தாங்கள் என்னுடைய மாயத்திரையை நீக்கி நன்றாக சிரத்தையோடு பார்த்தால் இந்த மண்ணும் ஜலமும் சமுத்திரமும், இதனுடைய கரையும், க்ஷேத்திரங்களும் எல்லாம் சுத்தமான பிரேமம் கலந்து இருப்பது உங்களுக்குத் தெரியும்.

பிரசேதஸ்ஸுகள் தபம் செய்தும் அவர்களுக்கு கீதை உபதேசித்ததும் இவ்விடத்தில்தான்! இவ்விடத்தில் வேறு சில காரணங்களாலும் இக்கேரள பூமி பாரதத்தில் பிரதானமாக இப்பூமி ஆகாயத்தில் விச்சிராந்தி இல்லாமல் யாத்திரை செய்து கொண்டு இருந்து உம்மை இவ்விடம் அழைத்தது, இப்பூமியில் பிரவசித்து கொண்டு இருக்கிற பக்தியாகிற அமிர்தத்தை பானம் செய்து சிரமபரிகாரம் செய்யவே! இவ்விடமே ஆனந்தத்திற்கு இருப்பிடமும் பரிசுத்தமான கோகுலமும் ஆகும்.

அழகான இக்கேரள பூமியில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்டம் மிகவும் மனோகரமாக இருக்கிறது. ஒருநாள் இருந்து கண்களுக்கு ஆனந்தத்தை அருளும் அந்த ஆட்டத்தைக் கண்டு போகலாம். இங்கே சுகப்பிரம்ம ரிஷி ஸ்ரீகிருஷ்ணனுடைய ப்ரீதிக்காக செய்த பாகவதத்தையும் கேட்டு ஆனந்திக்காலம். நீர் ஆத்ம அனுபவம் வந்த மகாத்மாவும் மகா கவியுமாய் இருக்கிறீர். இங்கு மலையாளத்தில் சாந்தியும் சந்துஷ்டியும் மனதிற்கு அளிப்பதையும் உணரலாம்!’’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் குரல் அசரீரியாக ஒலித்து, ஆசாரியரை புளகாங்கிதமடையச் செய்தது.

செவிகளுக்கு இன்பத்தைத் தரக்கூடிய இனிய இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகள் பகவானிடம் இவ்விதம் சொன்னார். ‘‘சுவாமி! கருணைக்கு இருப்பிடமான உம்முடைய அனுக்கிரகத்தால் பிரம்ம ஸ்தோத்திரங்களுக்கு பாஷ்யத்தையும் செய்து என்னுடைய மனதிற்கு சாந்தி ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது அதைவிட என்னுடைய மனதிற்கு ஆனந்த அனுபவம் உண்டாகிக் கொண்டிருக்கிறது. உம்முடைய சந்நதியில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறத விளக்குகளும்கூட வேத மந்திரங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள் இவைகளை சொல்லுவது போல் தோன்றுகிறது.

இந்த ஸத்தியஸ்திதி நாரத மகரிஷியின் வீணையில் இருந்தும் வௌிவந்து கொண்டு இருக்கிறது. இவ்விதம் ஆனந்தத்தை அனுபவிக்கின்ற பரிசுத்த மக்கள் தங்களுடைய சித்தத்தை உம்முடைய பாதங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். ஆனந்த சொரூபனான தங்கள் பாத துளிகள் இங்கு மணல் ரூபத்தில் இருக்கின்றன!’’ என்று ஆசாரிய சுவாமிகள் புகழ்ந்தார். மறுபடியும் சுவாமியை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.

உடனே ‘‘கோவிந்தாஷ்டகம்’’ என்று பெயர் கொண்ட ஒரு ஸ்தோத்திரத்தைச் செய்து பகவானைத் துதித்தார். அவ்விதமே ‘‘விஷ்ணு புஜங்கள்’’ என்கிற மற்றொரு ஸ்தோத்திரத்தையும் உருவாக்கி பகவானைப் போற்றித் துதித்தார். ஆதிசங்கரர் குருவாயூரப்பன் ஆலயத்தில் 41-நாட்கள் தங்கி சுவாமியின் பூஜா முறைகளை வகுத்து தந்துவிட்டு, அவற்றைப் பின் பற்றச் செய்தார். அப்போது தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் அவர் மூர்ச்சித்து விழுந்த அந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில்தான் அந்தக் கூரையில் ஒரு துவாரம் செய்து வைத்திருக்கிறார்கள்.

அதன் காரணமாகத்தான் இரவில் அந்த இடத்தில் சீவேலி வரும் போது கொஞ்ச நேரம் வாத்திய கோஷத்தை நிறுத்தி, செண்டை என்கிற வாத்தியத்தின் இடது பக்கம் தட்டி இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி வருகிறார்கள். பழைய மண்டபம் இடிக்கப்பட்ட பிறகும் கூடகாங்கிரீட் கூரையிலும் அந்தத் துவாரம் தற்போதும் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் கார்த்திகை ஏகாதசி நாளில் சீவேலி தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மண்டல பூஜை நாளில் ஆண்டு தோறும் ஸ்ரீஆதிசங்கரருக்கு ஜெயந்தி விழா பிரமாதமாக நடத்தப்பட்டு வருகிறது. அங்கே ஆதிசங்கரர் விக்கிரகத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். ஸ்ரீகுருவாயூரப்பன் மகிமையை உலக மக்களுக்குப் பறை சாற்றிய பெருமையில் பெருமளவு ‘‘நாராயணீயத்’’தைச் சாரும். அந்த பக்தி காவியத்தை இயற்றியவர் ஸ்ரீநாராயண பட்டத்திரி. இவர் கார்த்திகை மாதம் 28-ம் தேதி நாராயணீயத்தைப் பூர்த்தி செய்து ஸ்ரீகுருவாயூரப்பனின் திருவடிகளில் சமர்ப்பித்தாராம். அந்த நாள் இந்த கார்த்திகை ஏகாதசி பெருவிழா நாளில் கொண்டாடுவதும் ஒரு சிறப்பாகும்.

இப்படிப் பல சிறப்புகள் வாய்ந்த குருவாயூர் மகாக்ஷேத்திரத்தில் சக்தி வாய்ந்த இக்கோயிலில் வருடந்தோறும் ஒரு மண்டல காலம் நடைபெறும் கார்த்திகை சுக்லபட்ச ஏகாதசிப் பெருவிழாவைக் காண எண்ணற்ற பக்தர்கள் வந்து குவிகிறார்கள்.

தொகுப்பு: டி.எம். ரத்தினவேல்

The post குருவாயூரப்பன் தலத்தில் கார்த்திகை ஏகாதசி பெருவிழா appeared first on Dinakaran.

Tags : Karthikai Ekadasi festival ,Guruvayurappan ,Kerala ,Guruvayurappan Thalam ,
× RELATED சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!