×

ஸ்ரீரங்கத்தில் விடிய விடிய கைசிக ஏகாதசி விழா: கற்பூர பொடி தூவி பக்தர்கள் வழிபாடு


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விடிய விடிய கைசிக ஏகாதசி விழா நடந்தது. பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அந்தவகையில் கைசிக ஏகாதசி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி முதல் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று காலை சந்தனு மண்டபம் அடைந்தார். அங்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தனு மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு 5.45 மணிக்கு மூலஸ்தானம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து 2வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்றிரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்துக்கு வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்கள், 365 தாம்பூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தி சமர்ப்பித்தனர். நம்பெருமாளுக்கு சாற்றப்பட்ட வஸ்திரங்கள் திருப்பதியில் இருந்து வந்தது. இரவு 11.30 மணி தொடங்கி இன்று அதிகாலை 2 மணி வரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பட்டர் படித்தார்.

பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி 6மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் படியேறியபோது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை சுவாமி மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கண்டுகளித்தனர்.

The post ஸ்ரீரங்கத்தில் விடிய விடிய கைசிக ஏகாதசி விழா: கற்பூர பொடி தூவி பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kaishika Ekadasi Festival ,Srirangam ,Vidhiya Kaisika Ekadasi ,Srirangam Ranganatha ,Bhuloka Vaikundam ,Kaisika Ekadasi Festival ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...