×

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை ‘ஜோர்’

*ரூ.5 முதல் ரூ.200 வரை ‘சேல்ஸ்’

சேலம் : கார்த்திகை தீபத்தையொட்டி, சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபநாளன்று வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நாளில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும். சிவன் கோயில்களில் அன்று மாலை அகல் விளக்குகள் வைத்து, கல்தூணில் மகாதீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும்.

இதை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தருவார்கள். நடப்பாண்டு கார்த்திகை தீபவிழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

இது குறித்து அகல் விளக்கு வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். நடப்பாண்டு 26ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஒரு முகம், ஐந்து முகம் கொண்ட விளக்கு, மேஜிக் விளக்கு, குபேர விளக்கு, பிரதோஷ விளக்கு, தட்டு விளக்கு, ரங்கோலி விளக்கு, ஓம் விளக்கு, ஸ்வதிக் விளக்கு, கற்பக விருட்சக விளக்கு, தொங்கவிடப்படும் விளக்கு, மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் கோல்டு கலர் பெயிண்ட் அடித்து கண்ணை கவரும் வகையில் உள்ள விளக்கு உள்பட பலவகையான விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு மண் சிம்னி விளக்கு, மண் விளக்கில் வண்ண, வண்ண கலரில் காமாட்சியம்மன், மாரியம்மன், விநாயகர் உள்பட பல சுவாமிகளின் உருவம் கொண்ட விளக்குகள் புது வரவாக விற்பனைக்கு வந்துள்ளது. இதை பெண்கள் ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர். மண் விளக்கு ஐந்து ரூபாய் முதல் ரூ.50 வரையும், டெரகோட்டா விளக்கு ரூ.20 முதல் ரூ.200 வரையும் விற்பனைக்கு உள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

நாளை முதல் சிறப்பு பஸ்கள்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் நாளை (25ம் தேதி) முதல் 27ம் தேதி வரை இயக்கப்படுகிறது. சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், அரூர் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களிலும் சேலம் கோட்டம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை ‘ஜோர்’ appeared first on Dinakaran.

Tags : Karthika Deepam ,Salem ,Karthikai Deepam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...