×

ஆற்காட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு ₹25,000 அபராதம்

*டிஎஸ்பி எச்சரிக்கை

ஆற்காடு : ஆற்காட்டில் நடந்த ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சிறுவர்கள் பைக் ஓட்டினால் அவர்களது பெற்றோருக்கு ₹25,000 அபராதம் விதிக்கப்படும் என டிஎஸ்பி கூறினார்.பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விதிகளை மதிக்க வேண்டும். தேவையற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. அதேபோல் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது உட்பட பல்வேறு போக்குவரத்து விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் ஆற்காடு டவுன் மற்றும் தாலுகா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, பைக் ஓட்டிச் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. சிறுவர்கள் பைக் ஓட்டினால் அவர்களது பெற்றோருக்கு ₹25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஆற்காடு டவுன் மற்றும் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

The post ஆற்காட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு ₹25,000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Arcot ,DSP ,
× RELATED இறந்த கணவனை பார்க்கபோன மனைவியும் விபத்தில் பலி