×

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், 58ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.

இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு கடந்த 9ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் மேலூர், திருமங்கலம் பகுதி விவசாய பாசனத்திற்காக கடந்த 15ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வைகை பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. பெரியார் பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. இதில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசன பகுதியாகவும், 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒருபோக பாசன பகுதியாகவும் உள்ளது. 19 ஆயிரத்து 439 ஏக்கர் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன பகுதியாகவும், 38 ஆயிரத்து 248 ஏக்கர் விரிவாக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாய் பாசன பகுதியாகவும் உள்ளது. இதில் கடந்த 6 வருடங்களாக 58ம் கால்வாய் பகுதி பாசனப் பகுதியும் அடங்கியுள்ளது.

மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை வட்டங்களில் உள்ள 33 கண்மாய்கள் பாசனம் பெறும் வகையில் 58ம் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 1999ல் ரூ.33.81 கோடியில் 58-ம் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் செலவினம் படிப்படியாக உயர்ந்த காரணத்தால் ரூ.86.53 கோடியாக உயர்ந்தது. வைகை அணையில் இருந்து 27 கி.மீ செல்லும் பிரதான கால்வாய் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் 2ஆக பிரிகிறது.

இடது கால்வாய் 11.9 கிமீக்கும், வலது கால்வாய் 10.2 கிமீக்கும் செல்கிறது. அதில் மலை மற்றும் வனப்பகுதிகளில் சீரான நீரோட்டத்திற்காக 1.4 கிமீக்கு தொட்டி பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி மக்களின் நீண்டகால கனவு திட்டமாக இருந்த 58ம் கால்வாய் திட்டம் 2018ம் ஆண்டு நிறைவு பெற்றது. வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கும் மேல் உயர்ந்தால் மட்டுமே 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதன் அடிப்படையில் தான் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 58ம் கால்வாய் பகுதியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்து தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 58ம் கால்வாய் பாசனத்திற்கு வெறும் 150 கனஅடி தான் தேவைப்படுகிறது. எனவே 58ம் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதை வைகை அணை பாசன பரிவில் சேர்த்து வருடந்தோறும் முறையாக தண்ணீர் திறக்க அரசாணை வெளியிட வேண்டும். வைகை அணை 67 அடி உயர்ந்தால் மட்டுமே 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை உள்ளதால், அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்தால் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

நீர் திறக்கும் நாட்களை அதிகரிக்க வேண்டும்

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் பகுதிக்கு 1200 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதாவது 1 அடி தண்ணீர் மட்டும் தான் 58ம் கால்வாய் பாசனப் பகுதிக்கு தேவைப்படுகிறது. கால்வாய் மண்ணால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து 310 கனஅடி தண்ணீர் திறந்தால் கால்வாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் இந்த கால்வாயில் 150 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. எனவே சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என்று உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் சிமெண்ட் கால்வாய் அமைத்தால் ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே சிமெண்ட் கால்வாய் அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்றப்படும். இதனால் தண்ணீர் திறக்கும் நாட்களை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன முறையில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும்

வைகை அணையில் இருந்து வருடந்தோறும் ஜீன் மாதம் முதல்போகம், அக்டோபர் மாதம் இரண்டாம் போகம், மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கும், மேலூர், கள்ளந்திரி, திருமங்கலம் பிரதான கால்வாய், மற்றும் ராமநாதபுரம் கடமடை விவசாயிகளுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும். இந்தப் பகுதிகளில் தண்ணீர் திறப்பதற்கு முறையான அரசாணை உள்ளது. அதன்படி வரிசையாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஆனால் 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு வைகை அணை பாசனப் பிரிவில் சேர்க்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணை பாசனம் அனைத்தும் முடிந்த பிறகு தான் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால் அதற்குள் அணையின் நீர்மட்டமும் குறைந்து விடுகிறது. எனவே 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதை வைகை அணை பாசன முறையில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Vaigai Dam ,canal ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்