×

சிதம்பரம், விருத்தாசலம் ரயில் நிலையங்களை ₹14.9 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டம்

சிதம்பரம்/விருத்தாசலம், நவ. 24: ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம் அம்ரித் பாரத் ஸ்டேஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 1309 ரயில் நிலையங்கள் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதும், பயணத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் அதன் நீண்ட காலத்தேவைகள் மற்றும் பயணிகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, ஒரு மாஸ்டர் பிளான் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் ரயில் நிலையங்கள் முன்மாதிரியான நவீனமயமாக்கல் செயல்முறை திட்டத்தை ரயில்வே அமைச்சகம் முன்னெடுக்கப்படுகிறது. படிப்படியாக இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களான சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட இருக்கிறது.

சென்னை, திருச்சிராப்பள்ளி போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இதனை மேம்படுத்த வேண்டுமென பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி அம்ரித் பாரத் ரயில்வே ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தின் வசதிகளை மேம்படுத்த தற்போது ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதன்படி சிதம்பரம் ரயில் நிலையம் ரூ. 5.97 கோடி மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையம் ரூ. 8.93 கோடியில் மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் ரயில் நிலைய கட்டிடம் மற்றும் நுழைவு வாயில்கள் விரிவுபடுத்தப்படும். இப் பிரமாண்டமான மற்றும் வரவேற்கத்தக்க நுழைவு வாயில்கள், முன்பக்கத்தில் சாலைப்பணிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதசாரிகளுக்கான நடைபாதை, எளிதான வழிகள், புதிய கழிவறை அமைக்கப்படுகிறது.

பிளாட்பார்ம்களில் பணிகளுக்கு வசதியான பெஞ்சுகள், தண்ணீர் குழாய்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான நன்கு வடிவமைக்கப்பட்ட சரிவுகள் அமைக்கப்படும். கண்பார்வையற்றோருக்கு வழிகாட்டும் வகைகையில் தொட்டு உணரும் வகையிலான தளம் நிறுவப்படும். நிலையத்தின் உள்ளே புதிய தகவல் பலகைகள் மற்றும் எல்இடி டிஸ்ப்ளே போர்டுகள் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு வழிகாட்டும். பயணத் தகவல்களை எளிதாகவும், உடனுக்குடன் வழங்கும் நவீன சிஸ்டம் பொருத்தப்படும். இதன்மூலம் ரயில் வரும் நேரம் உள்ளிட்ட தகவல் துல்லியமாக வந்து சேரும், எல்இடி விளக்குகள் பொருத்துதல் ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும். சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலைய கட்டிடத்தின் நவீனமயமாக்கல் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

The post சிதம்பரம், விருத்தாசலம் ரயில் நிலையங்களை ₹14.9 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Vriddhachalam ,Vridthachalam ,Union Government Ministry of Railways ,Amrit Bharat Station ,Dinakaran ,
× RELATED மாசி மகத்தையொட்டி விருத்தாசலத்தில்...