×

தனியாரிடம் வாங்கினால் கூடுதல் செலவாகிறது போதிய உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

திருவாரூர், நவ. 24: திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஓ சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், இதேபோல் கோட்ட அளவில் ஆர்.டி.ஓக்கள் தலைமையில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியிலும் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் கோட்ட அளவிலான குறைதீர் கூட்டமானது நேற்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஓ சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாய சங்்கத்தை சேர்ந்த சேதுராமன், ராமமூர்த்தி, முருகேசன், பாபு மற்றும் அழகர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். அப்போது குறுவை சாகுபடியானது நீரில்லாமல் கருகி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சம்பா சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனை வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் தனியார் உரக்கடைகளில் யூரியா உரத்துடன் கூடுதலாககுருணைஉள்ளிட்ட உரங்களை வாங்கினால் மட்டுமே யூரியா உரம் கிடைக்கும் என ஒரு மூட்டை யூரியா வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.1,000 வரையில் தனியார் கடைகள் செலவு வைத்து வருகின்றன.

எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தேவையான உரங்களை வழங்குவதற்கும், இருப்பு வைக்கவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் கூட்டுறவு கடன்களையும் முழுமையாக வழங்கிட வேண்டும் என தெரிவித்தனர். இறுதியாக பேசிய ஆர்டிஓ சங்கீதா, விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் பின்னர் அரசுக்கு அனுப்பப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

The post தனியாரிடம் வாங்கினால் கூடுதல் செலவாகிறது போதிய உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiruvarur ,RTO ,Dinakaran ,
× RELATED திருவாரூர்-விளமல்-கும்பகோணம்...