×

மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை: பள்ளிச்சுவர்,வீடு இடிந்து விழுந்தது

 

ராமநாதபுரம், நவ.24: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விடிய,விடிய கனமழை வெளுத்து வாங்கியது. மழைக்கு வீடு, பள்ளிக்கூட சுவர், மரங்கள், மின் கம்பங்கள் விழுந்தது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. அக்டோபர் மாத கடைசி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய,விடிய மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலாடியில் 174.00 மி.மீ. வாலிநோக்கத்தில் 146.40, குறைந்தபட்சமாக தங்கச்சிமடத்தில் 36.00 மி.மீ என ராமநாதபுரம் மாவட்டத்தில் 112 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு ராமநாதபுரத்தில் சென்னை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் மகர்நோன்பு திடல் பகுதியில் பாதாளசாக்கடை குழாய் அடைத்து கழிவுநீர் வெளியேறியது. இதனால் இப்பகுதியிலுள்ள காட்டுபிள்ளையார்கோயில் தெரு, மேட்டுத் தெரு, தங்கப்பா நகர், மாரியம்மன்கோயில் தெரு மக்கள், மாணவர்கள் கழிவுநீரில் நடந்து சென்றனர்.

சாயல்குடி பஸ் ஸ்டாண்ட், சந்தைபேட்டை, அண்ணாநகர், மூக்கையூர் சாலை அருகிலுள்ள அருந்ததியர் குடியிருப்பு, கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் குடியிருப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி தெரு, கால்நடை மருத்துவமனை தெரு, தேவ ர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபோன்று சாயல்குடி அருந்ததியர் குடியிருப்பில் முருகவள்ளிநாகராஜன் என்ற கூலி தொழிலாளியின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் இடிபாடுகளுடன் சிக்கி சேதமாயின. கடலாடி,முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் காலம் கடந்து விவசாயம் செய்யப்பட்டதால் நெல்,மிளகாய் பயிர்கள் தற்போது இரண்டு மாத பயிராக உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு எம்.கரிசல்குளம், ஒச்சதேவன்கோட்டை, கொம்பூதி, கிடாத்திருக்கை, உச்சிநத்தம் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்களில் மழைநீர் முழுவதும் தேங்கியதால் நெல்,மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்கள் மழைநீரில் மூழ்கி கிடக்கிறது. மேலும் கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகே மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

The post மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை: பள்ளிச்சுவர்,வீடு இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு தயாராகும் உப்பளங்கள்