×

கரூர் -கொடுமுடி நெடுஞ்சாலை சத்திரம் கடைவீதி வடிகாலில் அடைப்பு சுகாதாரகேடால் பொதுமக்கள் அவதி

 

க.பரமத்தி, நவ.24: கரூர் -கொடுமுடி நெடுஞ்சாலையில் சத்திரம் கடைவீதியில் சாலையோரம் போதிய வடிகால் வசதியில்லாததால் மழை நீர் சாலையில் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் சத்திரம் கடைவீதி உள்ளது. இங்கு சத்திரம், பிரேம்நகர், பெருமாள்நகர், எம்ஜிஆர்நகர், புள்ளையாம்பாளையம், பொன்னியானூர், நடுப்பாளையம், தண்ணீர்பந்தல், புன்னம், அய்யனூர், குளத்தூர், கைலாசபுரம், சடையம்பாளையம், பசுபதிபாளையம், வசந்தம் காலனி, ஆலாம்பாளையம், பழமாபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், மின்வாரிய அலுவலகம், வங்கி சேவைகள் போன்றவற்றிற்காக புன்னம்சத்திரம் கடைவீதிக்கு தான் வந்து செல்கின்றனர். மேலும் கரூர், கொடுமுடி, ஈரோடு போன்ற ஊர்களுக்கு செல்வதற்கும் கரூர் செல்ல இந்த கடைவீதிக்கு வருகின்றனர்.

இவ்வாறு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கடைவீதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் வசதி அமைக்கப்பட்டது. இந்த மழைநீர் வடிகால் தற்போது ஆங்காங்கே தனி நபர்களால் அடைக்கப்பட்டும், வீடுகள், கடைகளின் கழிவுநீரை வடிகால்களில் விட்டு வருகின்றனர். இதனால் போதிய வடிகால் வசதி இன்றி மழை காலங்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை நீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வடிகாலில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது.இதை சீரமைக்கக் கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இதை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

The post கரூர் -கொடுமுடி நெடுஞ்சாலை சத்திரம் கடைவீதி வடிகாலில் அடைப்பு சுகாதாரகேடால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Karur-Kodumudi highway ,Chhatram ,K. Paramathi ,Chhatram Kadaveedi ,
× RELATED நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்