×

பவித்திரம் அரசு பள்ளியில் சுகாதாரமான குடிநீர் கேட்டு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

 

க.பரமத்தி, நவ.24: க.பரமத்தி அருகே பவித்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் கேட்டு வகுப்பறைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. க.பரமத்தி ஒன்றியம் பவித்திரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 72 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பொதுப்பணி துறை மூலம் கடந்த 2022ம் ஆண்டு முதல் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு மாணவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3மாதங்களாக இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து இயந்திரம் பொருத்திய திருச்சியை சேர்ந்த நிறுவனத்தினருக்கு பலமுறை தகவல் அளித்தும் இதுவரை இயந்திரம் சரி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் ஆழ்துளை கிணற்று நீரை குடித்து வருகின்றனர்.

ஆனால் இந்த நீரை சேமித்து வைக்கும் தொட்டிக்கு மூடி இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மாணவர்கள் அதனை பயன்படுத்த தயங்கி வீட்டிலிருந்து குடிநீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சில நேரங்களில் ஆழ்துளை கிணற்று நீரை குடிக்க வேண்டியதிருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள், பெற்றோருடன் வந்து வகுப்புகளுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி, ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது குடிதண்ணீர் விநியோகம் ஓரிரு நாள்களில் சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் பள்ளியில் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

The post பவித்திரம் அரசு பள்ளியில் சுகாதாரமான குடிநீர் கேட்டு மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு appeared first on Dinakaran.

Tags : Bavithram Government School ,Paramathi ,Pavitram Government High School ,
× RELATED பவித்திரம் காலனி பகுதியில் உள்ள...