×

காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிபட்டன: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் கொட்டும் மழையிலும், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக பிடித்து, கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், விபத்துக்கள் ஏற்பட்டு பெரும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு மூட்டி பேருந்தில் சிக்கி முதியவர் ஒருவர் பலியானதும், மற்றொரு பகுதியில் மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட காட்சிகளும் வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனை கருத்தில் கொண்டு கால்நடைகளால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் அறிவுறுத்தலின்பேரில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆலோசனை வழங்கியிருந்தார். மாநகராட்சி நகர்நல அலுவலர் அருள்நம்பி தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலை, காமராஜர் சாலை, தேரடி, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை, கொட்டும் மழை என்றும் பாராமல் அதிரடியாக பறிமுதல் செய்து, அவற்றை வாகனங்களில் ஏற்றி திருவண்ணாமலையிலுள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

குறிப்பாக மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டவுடன் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே கோசாலைக்கு மாடுகள் அனுப்பப்பட்டது. மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்யும்போது, மாடுகளின் உரிமையாளர்கள் சிலர், இந்த ஒருமுறை மன்னித்து கொள்ளுங்கள், இனி இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என கெஞ்சும் காட்சிகளும் ஒருசில இடங்களில் அரங்கேறியது. இருப்பினும் மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளை பறிமுதல் செய்தனர். கொட்டும் மழையிலும் சாலைகளில் சுற்றித்திருந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக பறிமுதல் செய்த செயல் சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிபட்டன: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Municipal Corporation ,Gosala ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...