×

கடந்த 31 ஆண்டுகளாக தொடங்கப்படாத நிலையில் சர்க்கரை ஆலைக்காக அளித்த நிலத்தை சிப்காட்டிற்கு ஒப்படைக்க எதிர்ப்பு: நிலம் தந்தவர்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி: சர்க்கரை ஆலைக்காக ஒப்படைத்த நிலத்தை சிப்காட்டிற்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து நிலம் தந்தவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் சர்க்கரை ஆலை அமைக்க அப்பகுதியை சேர்ந்த 72 பேர் அவர்களுக்கு சொந்தமான 78.34 ஏக்கர் நிலத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்றும், 1 சென்ட் ரூ.1,400 என தந்துள்ளனர். மேலும், ஆலை துவங்க பங்கு தொகை செலுத்தி அனைவரும் பங்குதாரர்களாக மாறி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 31 ஆண்டுகளாக சர்க்கரை ஆலை துவக்கப்படாத நிலையில், சர்க்கரை ஆலைக்காக தந்த நிலத்தை தங்களுக்கே திருப்பி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, சர்க்கரை ஆலைக்கு புதுவாயல் பகுதி மக்கள் தந்த நிலத்தை, சிப்காட்டிற்கு தமிழக அரசு ஒப்படைத்தது. இந்நிலையில், நிலத்தை வருவாய் துறையினர் வட்டாட்சியர் பிரீத்தி தலைமையில், கும்மிடிப்பூண்டி ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையில் நேற்று 100 போலீஸார் பாதுகாப்புடன் அளவீடு செய்ய வந்தனர்.

இதுகுறித்து அறிந்த நிலத்தை தந்த மக்கள் புதுவாயல் கிராம தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட நிலம் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் வருவாய் துறையினரை முற்றுகையிட்டனர். அப்போது, அவர்கள் சர்க்கரை ஆலைக்கென்று, வீட்டிற்கு ஒருவருக்கு வேலை தருவதாக அரசு நிர்வாகத்தின் உறுதியின் பேரில் 1992ம் ஆண்டு வெறும் ரூ.1,400 நிலத்தை தந்தோம். இப்போது, 30 ஆண்டுகள் கழித்து சர்க்கரை ஆலை செயல்படாது என அரசு கூறியள்ளது. இந்நிலையில், இந்த நிலத்தை சிப்காட்டிற்கு தராமல், நிலத்தை இழந்த விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த சம்பவ குறித்து தெரிய வந்ததும் விரைந்து வந்த திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்ககுனர் மலர்விழி, வட்டாட்சியர் பிரீத்தி ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் நிலத்தை தங்களிடமே திரும்ப வழங்க வேண்டும். இன்றைய, சந்தை மதிப்பீட்டில் தங்கள் நிலத்திற்கான விலையை தந்து நிலத்தை கையகப்படுத்தி கொள்ளட்டும் அதுவரை நிலத்தை அளவீடு செய்யக்கூடாது என வலியுறுத்தினார்கள். அவர்களிடம் பேசிய திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர், பொதுமக்கள் தந்த கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் தந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிலளித்தார். பின்னர், கூட்டத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post கடந்த 31 ஆண்டுகளாக தொடங்கப்படாத நிலையில் சர்க்கரை ஆலைக்காக அளித்த நிலத்தை சிப்காட்டிற்கு ஒப்படைக்க எதிர்ப்பு: நிலம் தந்தவர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Chipgat ,Kummidipoondi ,Chipgat.… ,Dinakaran ,
× RELATED திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்