×

சேதமடைந்து காணப்படும் தலக்காஞ்சேரி செல்லும் சாலை: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் பஜார் வீதியில் இருந்து காமராஜர் சாலை வழியாக தலக்காஞ்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, எடப்பாளையம், தலக்காஞ்சேரி ஊராட்சிக்கு செல்வதற்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த சாலையில், தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என தினமும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

மேலும், பள்ளி வாகனம், கார், ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார்சாலையாக அமைக்கப்பட்டது. அதன்பின், சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், காமராஜர் சாலையில் இருந்து, ஒரு கி.மீ. துாரம் வரை சாலை, குண்டும், குழியுமாக மாறிவிட்டது. தற்போது மழை பெய்து வருவதால், ஆங்காங்கே சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, குளமாக காட்சியளிக்கிறது.

இதனால், பள்ளி மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையில் சென்று வர பெரிதும் அவதிப்படுகின்றனர்.  மேலும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வருவோர், அடிக்கடி பள்ளத்தில் தவறி விழுந்து, காயமடைந்து வருகின்றனர். மேலும், இச்சாலை குறுகலாக உள்ளதால், காலை மற்றும் மாலை நேரத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், இச்சாலையை சீரமைத்து, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சேதமடைந்து காணப்படும் தலக்காஞ்சேரி செல்லும் சாலை: மாணவர்கள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thalakancheri ,Tiruvallur ,Thiruvallur Bazar Road ,Kamaraj Road ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...