×

ஆழ்துளை கிணறு பகுதியில் கால்நடை கழிவுகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்: உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது

பள்ளிப்பட்டு: எஸ்.பி.கண்டிகை இருளர் காலனியில் ஆழ்துளை கிணறு பகுதியில் கால்நடை கழிவுகள் கொட்டப்பட்டதால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எஸ்விஜி.புரம் ஊராட்சி எஸ்பி கண்டிகை இருளர் காலனியில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மேலும் இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிலர் ஆடு மாடுகளின் சாணத்தை ஆழ்துளை கிணறு அருகே கொட்டப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து மஞ்சள் நிறமாக வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் இருளர் காலனிக்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் சாணத்தை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் தண்ணீரை பரிசோதனை செய்ததில் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கைகளால் இருளர் காலனி மக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

The post ஆழ்துளை கிணறு பகுதியில் கால்நடை கழிவுகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்: உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Cattle Waste Regional Development Office ,Altula Kinaru ,Pallipattu ,S.P.Kandigai Irular Colony ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை