×

மாதத்தில் ஒரு நாள் முழுவதும் மக்களுடன் கலெக்டர்கள் தங்க வேண்டும்: ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் குறைகளுக்கு உடனடி தீர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாதத்தில் ஒரு நாள் முழுவதும் கிராமங்களில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் அந்தப் புகார்கள் அனைத்தையும் பிரித்து, ஒவ்வொரு துறைகளுக்கும் அனுப்பி, அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்காணிக்க தனி துறையையும் ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாகவும், நேரடியாகவும் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க களத்தில் முதல்வர் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று துறைவாரியாக ஆய்வுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அடுத்த கட்டமாக, உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களை சரியாக சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாக கிடைக்கின்றனவா? என்பதை முதல்வரே களத்திற்கு நேரடியாக சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம். ‘‘மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்’’ என்று சொன்ன அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது.

மக்களுக்காக செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் மையமாக கொண்டு தீட்டப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியதும், மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளை களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி ஆகும். அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களை தேடிச் சென்று பணியாற்ற வேண்டும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்கள்.

ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும், அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்னைகளுக்கும், தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சி தலைவர். தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும், ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களை பார்க்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களிடம் திங்கட்கிழமை தோறும் வந்து மனு அளிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் பதவியின் கம்பீரம் மக்களை கலவரம் அடையச் செய்வதில்லை, மாறாக கவர்ந்திழுக்கிறது.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் (கிராமம்) அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்வார்கள். இந்தத்திட்டம், ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டம் என்று கூறலாம். மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம்.

உங்களை நாடி, உங்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது. நானும், அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம். கவனமுடன் உங்கள் குறை கேட்போம்; களத்திலேயே தீர்வு காண்போம்; மக்களின் கவலையை போக்குவோம்; மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற இந்த புதிய திட்டம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம், ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டம் என்று கூறலாம். மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம்.
* உங்களை நாடி, உங்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது. நானும், அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம். கவனமுடன் உங்கள் குறை கேட்போம்; களத்திலேயே தீர்வு காண்போம்; மக்களின் கவலையை போக்குவோம்; மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

The post மாதத்தில் ஒரு நாள் முழுவதும் மக்களுடன் கலெக்டர்கள் தங்க வேண்டும்: ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் குறைகளுக்கு உடனடி தீர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு...