×

ஒருவழிப்பாதையில் வரக்கூடாது என்று எச்சரித்த பெண் காவலரை பைக் ஏற்றி கொல்ல முயற்சி: போதை ஆசாமி கைது

அண்ணாநகர்: அமைந்தகரையில், ஒருவழிப்பாதையில் வரக்கூடாது என்று எச்சரித்த பெண் காவலரை பைக் ஏற்றி கொல்ல முயன்ற போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். அமைந்தகரை பகுதியில் அண்ணாநகர் போக்குவரத்து காவலர் அனிதா (34), நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு வழிப்பாதையில் அசுர வேகத்தில் ஒருவர் பைக்கில் வந்தார். அவரை, காவலர் அனிதா மடக்கி, பிடித்து விசாரித்தார். மேலும், ‘‘ஒரு வழிப்பாதையில் வரக்கூடாது,’’ என்று எச்சரித்துள்ளார். ஆனால், போதையில் இருந்த அந்த நபர், ‘‘நான் ஒருவழிப் பாதையில்தான் வருவேன். முடிந்தால் நடவடிக்கை எடுங்கள்,’’ என்று கூறியதுடன், பெண் போலீசிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் திடீரென அந்த நபர், பெண் காவலர் மீது பைக்கை வேகமாக மோதிவிட்டு, தப்பியோட முயன்றார்.

இதை பார்த்து, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து, அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த காவலர் அனிதா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதுசம்பந்தமாக அவர் கொடுத்த புகாரின்பேரில், அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய அரும்பாக்கம், அசோக நகர் பகுதியை சேர்ந்த பெயின்டர் வெங்கடேசன் (55) என்பவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சித்தல் (308) பிரிவில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.

 

The post ஒருவழிப்பாதையில் வரக்கூடாது என்று எச்சரித்த பெண் காவலரை பைக் ஏற்றி கொல்ல முயற்சி: போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Nadalkarai ,Dinakaran ,
× RELATED செவிலியரை தாக்கியதாக பெண் மருத்துவர் மீது புகார்