×

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்

திருவனந்தபுரம்: தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி நேற்று கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டவர் பாத்திமா பீவி. தமிழகத்தின் முதல் பெண் கவர்னரான இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள குலசேகரபேட்டை ஆகும். திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற பாத்திமா பீவி, தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றார். 1950ல் கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் 8 வருடங்களுக்கு பிறகு தேர்வு எழுதி முன்சீப் ஆனார். 1972ல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டாகவும், 1974ல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாகவும் ஆனார். 1983ல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1992ல் இவர் ஓய்வு பெற்றார். பின்னர் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1997ல் இவர் தமிழக கவர்னர் ஆனார். 2001 ஜூலை மாதம் இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து கேரளா திரும்பினார். இந்நிலையில் 96 வயதான பாத்திமா பீவி உடல்நலக் குறைவால் சிலநாட்களுக்கு முன் கேரள மாநிலம் கொல்லத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை அவர் காலமானார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.இன்று பத்தனம்திட்டாவில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

The post தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார் appeared first on Dinakaran.

Tags : Former Tamil Nadu ,Governor ,Fatima Bivi ,Thiruvananthapuram ,Former ,Tamil ,Nadu ,Kollam ,Dinakaran ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...