×

சீனாவில் பரவும் புதுவகையான காய்ச்சல்: விவரம் கேட்கிறது உலகம் சுகாதார அமைப்பு

ஜெனீவா: சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. மேலும் சுவாச பிரச்னைகளையும் பலர் எதிர்கொண்டுவருவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த 13ம் தேதி சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள் சுவாச நோய்கள் அதிகரித்துள்ளதாக அறிவித்தனர். மேலும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும், மற்ற நாடுகளிலும் இதுபோன்ற சுவாச பிரச்னை மற்றும் சுவாச நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்னைகள் குறித்து உலக சுகாதார அமைப்பானது சீனாவிடம் நேரடியாக விளக்கம் கேட்டுள்ளது. நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அக்டோபர் நடுவில் இருந்து வடக்கு சீனாவில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீன அதிகாரிகள் அறிவித்துள்ள சுவாச நோய் தொற்று அதிகரிப்புக்கும் காய்ச்சலுக்கும் தொடர்புடையாதா என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போது இருக்கும் வைரஸ்கள், சுவாச நோய்கள் மற்றும் காய்ச்சல், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் குறித்து சீனாவிடம் அதிகாரப்பூர்வமாக கேட்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று பரவல், லாக்டவுன் நடவடிக்கைக்கு பின் சீனா எதிர்கொள்ளும் முதல் குளிர்காலம் என்றும், இதனால் சீனாவில் குழந்தைகள் பருவகால தொற்றுநோய்களை எதிர்கொண்டுள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

The post சீனாவில் பரவும் புதுவகையான காய்ச்சல்: விவரம் கேட்கிறது உலகம் சுகாதார அமைப்பு appeared first on Dinakaran.

Tags : outbreak in ,China ,World Health Organization ,Geneva ,Dinakaran ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...