×

முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவு தமிழக தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நல குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவரும், பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவருமான பாத்திமா பீவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் (முன் னாள் முதல்வர்): முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி ஜெயலலிதாவின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அவர் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): நாட்டின் ஜனநாயக வாழ்வு நெருக்கடிக்கும், நீதிபரிபாலன முறை ஆபத்துக்கும் ஆளாகியுள்ள நேரத்தில் அனுபவம் வாய்ந்த நீதியரசர், அரசியல் விற்பன்னர் பத்திமா பீவி மறைவு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தமிழக ஆளுநராக பாத்திமா பீவி 1997ம் ஆண்டு முதல் 2001 வரை சிறப்பாக பணியாற்றியவர். மூப்பனாரோடு மரியாதை கலந்த நட்போடு பழகியவர். சிறந்த பண்பாளர். அவரது இழப்பு பேரிழப்பாகும்.

டி.டி.வி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): ஆளுநராக பதவி வகித்த பாத்திமா பீவி, அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனுக்கான கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியவர். சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த பாத்திமா பீவி ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். ஜவாஹிருல்லா (மமக தலைவர்): நாடு முழுவதும், நீதித்துறையில் பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பாத்திமா பீவி. நீதித் துறையில் உச்ச பதவிகளைப் பெற்ற முதல் முஸ்லிம் பெண்ணும் இவர்தான். அவரது மறைவு பேரிழப்பு. பிரசிடெண்ட் அபூபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்): தமிழக ஆளுநராக பாத்திமா பீவி இருந்த காலத்தில் சென்னை ராஜ்பவனில் பழைய பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு, திறப்பு விழா கண்டது. முதல்வராக இருந்த கலைஞர் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட பள்ளிவாசலில் இன்று 5 வேளை தொழுகை நடந்து கொண்டிருக்கிறது. பாத்திமா பீவி மறைவு பேரிழப்பாகும். இதேபோல பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

The post முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவு தமிழக தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,Fatima Bivi ,Chennai ,Tamil ,Nadu ,Edappadi Palaniswami ,AIADMK ,General Secretary ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...