×

திருப்போரூர் நான்கு மாடவீதிகளில் சுபமுகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்போரூர்: சுபமுகூர்த்த நாட்களில், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நடைபெறும் திருமணங்களால் நான்கு மாடவீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் சுபமுகூர்த்த தினங்களில் பெரும்பாலானோர் தங்களின் இல்ல திருமணங்களை நடத்துவதற்கு வேண்டுதல் செய்கின்றனர். இதன் காரணமாக முக்கிய முகூர்த்த தினங்களில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், கோயிலின் பக்தர்கள் என பலரும் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு படை எடுக்கின்றனர்.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. அதுமட்டுமின்றி திருப்போரூரில் கோயிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளிலும், 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. அனைத்து முகூர்த்த தினங்களிலும் இந்த திருமண மண்டபங்களில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த புக்கிங் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நான்கு மாடவீதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மக்கள் நடமாட்டம் உள்ளது.

குறிப்பாக, கிழக்கு மாடவீதியில் உள்ள நெம்மேலி சாலை சந்திப்பில் பல வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டு அந்த இடத்தை கடப்பதற்கு மட்டும் 1 மணி நேரத்திற்கு மேலாகிறது. இதுமட்டுமின்றி நான்கு மாடவீதிகளிலும் வாகனங்களை பலரும் தாறுமாறாக நிறுத்தி விட்டு கோயிலுக்குள் சென்று விடுகின்றனர். போலீசாரும் அவ்வப்போது வந்து முறைகேடாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் வாகன நிறுத்தும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத நிலை உள்ளது. ஆகவே, திருப்போரூர் புறவழிச்சாலையில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பெரியளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டும் பேட்டரி கார் வசதி செய்து தந்தால், நான்கு மாடவீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

The post திருப்போரூர் நான்கு மாடவீதிகளில் சுபமுகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruppurur ,Tiruporur ,Subhamukurtha ,Tiruporur Kandaswamy Temple ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ