காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான முன்னோட்ட கருத்தரங்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் வாயிலாக ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள்-2024 மாநாட்டிற்கான முன்னோட்ட கருத்தரங்கம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கருத்தரங்கை துவக்கி வைத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குவது எம்எஸ்எம்இ துறையாகும். உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்திடவும், 2030ல் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையவும், முதல்வர் தலைமையில் வரும் ஜனவரி மாதம் 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் மாநாடு முக்கிய பங்கு வகிக்கும்.
முதல்வர் ஆட்சி பொறுப்பேற்று இதுவரை, தொழில் துறையில் வெளிநாடுகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி முதலீடுகளை ஈர்த்து, 4 லட்சத்து 15 ஆயிரத்து 252 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அயராத உழைப்பினாலும் சீரிய திட்டங்களாலும் இந்திய அளவில் தொழில்துறையில் 14ம் இடத்திலிருந்த தமிழ்நாடு இன்று 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாநாடுகள் நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் வாயிலாக ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள் போன்றவை தொடங்கப்பட உள்ளது. 18 ஆயிரத்து 404 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். சுயதொழில் திட்டங்கள் மூலம் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக 5 வகையான சுயதொழில் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
ரூ.1,099 கோடியே 86 லட்சம் மானியத்துடன் ரூ.3 ஆயிரத்து 890 கோடியே 59 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 30 ஆயிரத்து 981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ.126 கோடியே 84 லட்சம் மானியத்துடன் ரூ.256 கோடியே 7 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1065 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.35 கோடியே 38 லட்சம் மானியத்துடன் ரூ.120 கோடியே 82 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1,211 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே முதன் முறையாக சொத்து பிணையில்லா கடன்பெற தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறுந்தொழில் நிறுவனங்களின் மூலதன செலவை குறைக்கவும் உடனடியாக தொழில் தொடங்கவும் கிண்டி, அம்பத்தூர், சேலம் ஆகிய இடங்களில் ரூ.175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 264 தொழில் கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் விரைவில் முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளன. புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 812 இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் 266 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ.7 கோடியே 39 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.4000 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.4102.27 கோடிக்கான 320 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும், வாங்குபவர், விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதி மற்றும் உரிமங்கள் விரைவாக பெற்றிட மாவட்ட தொழில் மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்ராஜ், கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் வெங்கடேசன், அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.
The post உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான முன்னோட்ட கருத்தரங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.
