×

வாச்சாத்தி வழக்கில் மேலும் ஒரு அதிகாரி கோர்ட்டில் சரண்

தர்மபுரி: வாச்சாத்தி வழக்கில் தொடர்புடைய, மேலும் ஒரு முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி, நேற்று தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, வாச்சாத்தி கிராமத்தில் உள்ளவர்கள் சந்தனக் கட்டை கடத்தல்லில் ஈடுபடுவதாக, கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனம், வருவாய் மற்றும் காவல் துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அந்த கிராமத்தில் தேடுதல் பணி மேற்கொண்டனர். அப்போது, ஆண்களை அடித்து துன்புறுத்தியும், சிறுமிகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்தும் அத்துமீறலில் ஈடுபட்டதாக 269 பேருக்கும், தர்மபுரி நீதிமன்றம் தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தவர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, உடனடியாக சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், வாச்சாத்தி சம்பவம் நடந்த போது, அரூர் முதன்மை வனக்காப்பாளராக பணியாற்றிய முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி பாலாஜி (66), தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், முன்னாள் தர்மபுரி மாவட்ட வன அலுவலராக பணியாற்றிய ஐஎப்எஸ் அதிகாரி நாதன்(70), தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி (பொ) மோனிகா முன்னிலையில் நேற்று சரணடைந்தார். வாச்சாத்தி வழக்கில் இவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சரணடைந்த நாதனை, போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

The post வாச்சாத்தி வழக்கில் மேலும் ஒரு அதிகாரி கோர்ட்டில் சரண் appeared first on Dinakaran.

Tags : Vachathi ,Dharmapuri ,IFS ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED வாச்சாத்தி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு