×

ஆளுநருக்கு மீண்டும் செக்; மசோதாவை ஆளுநர் தடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் தடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அங்கு ஆளும் அரசுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவது, மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது என ஆளுநர்கள் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் 2 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள மாநில அரசும், அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வரிசையில் பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது, சட்டப்பேரவையை கூட்ட மறுப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதில்; சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் தடுக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் தடுக்க முடியாது. ஆளுநர் மசோதாவை நிராகரிக்க விரும்பினால் அதை மீண்டும் சட்டபேரவையின் பரிசீலனைக்கே அனுப்ப வேண்டும்.

ஆளுநர் சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம், அரசுக்கு திருப்பி அனுப்பலாம். 3-வது வாய்ப்பாக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்களை ஆளுநர் அனுப்பலாம். ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைக்க நினைத்தால் அதை கட்டாயம் அரசின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 200 ஆளுநருக்கான அதிகாரத்தை தெளிவாக வரையறுத்திருப்பதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

The post ஆளுநருக்கு மீண்டும் செக்; மசோதாவை ஆளுநர் தடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Baja ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்கில்...