×

தமிழ்நாடு பெண்கள் வாக்களித்து 40 தொகுதியிலும் திமுகவை வெற்றிபெற வைப்பார்கள்: இயக்குனர் கரு.பழனியப்பன் பேச்சு


பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக. நகர் வடக்கு பகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி ஓட்டேரியில் நேற்று மாலை ‘’கதை, திரைக்கதை, வசனம் கலைஞரே என்றைக்கும் சிகரம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் திரைப்பட நடிகை குட்டி பத்மினி, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினர். கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில், கரு.பழனியப்பன் பேசியதாவது; கலைஞர் தனது எழுத்தால் அரசியலுக்கு வருவதற்கு முன்பே சொந்த வீடு வாங்கியவர். திராவிட இயக்க தலைவர்களில் முதலில் கார் வாங்கியவர் கலைஞர்தான். நடிகராக சிவாஜி 250 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில் எழுத்தாளராக வசனகர்த்தாவாக 500 ரூபாய் சம்பளம் வாங்கியவர் கலைஞர். அவர் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில் தங்கத்தின் விலை கிராம் 10 ரூபாய்தான். கலைஞரை செல்வந்தனாக மாற்றியது தமிழ் சினிமா. குழித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றார். கலைஞர் இறப்பிற்கு தமிழகத்தின் கட்சி சார்பின்றி அனைத்து தரப்பட்ட மகளிரும் கண்ணீர் வடித்தார்கள், ஏனென்றால் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் என்பதை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மகளிரும் அறிந்திருந்தனர்.

எழுத்து, பேச்சு, வசனம் என தான் தொட்ட இடங்கள் அத்தனையிலும் ஜொலித்ததினால் தான் கலைஞரை பற்றி 100 கூட்டம் பேச முடிகிறது. எம்ஜிஆரை விட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் பெண்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. அதற்கு இன்றைய கூட்டமே சாட்சி. இனி எத்தனை ஆட்சி வந்தாலும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை ரத்து செய்ய முடியாது. இந்தியாவில் எல்லாம் மாநிலங்களுக்கும் முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுகவிற்கு தமிழகத்தின் பெண்கள் தருவார்கள். முதல்வர் சொல்வதை போல 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால் தான் நம் குரல் இன்னமும் வலிமையானதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா பேசும்போது, ‘’தமிழகத்தில் அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகின்றது. அதை பொறுத்துகொள்ள முடியாமல் தான் ஒன்றிய அரசினர் விமர்சிக்கிறார்கள். அறநிலையத்துறை தான் களவுபோன 190 சிலையை மீட்டு கொண்டுவந்துள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில், இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், வர்த்தக அணி அமைப்பாளர் உதயசங்கர், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு பெண்கள் வாக்களித்து 40 தொகுதியிலும் திமுகவை வெற்றிபெற வைப்பார்கள்: இயக்குனர் கரு.பழனியப்பன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dimuka ,Karu Palaniappan ,Perampur ,Chennai East District Festival ,NORTHERN REGION OF NAGAR ,ARTIST ,YOTI OTTERI ,Nadu ,
× RELATED சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’...