×

‘பஸ்சுடன் மானந்தவாடி ஆற்றில் தள்ளுவோம்’ கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல்


திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து மந்திரிகளுடனும் 140 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறை கேட்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதற்கு ‘நவகேரள சதஸ்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக சமீபத்தில் பெங்களூருவில் இருந்து ₹1.05 கோடிக்கு புதிய சொகுசு பஸ் வாங்கப்பட்டது. இந்த பஸ்சில் தான் முதல்வர், அமைச்சர்கள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காசர்கோடு மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இன்று வயநாடு மாவட்டத்தில் நவகேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று வயநாடு கலெக்டர் அலுவலகத்திற்கு தபாலில் 2 கடிதங்கள் வந்தன. சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் பெயரில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

அதில் எழுதப்பட்டிருந்த விவரங்கள் வருமாறு: வயநாடு மாவட்டத்தில் நடக்கும் கேரள சதஸ் நிகழ்ச்சியின்போது கேரள அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம். உண்மையான புரட்சி கம்யூனிஸ்டுகளான மாவோயிஸ்டுகளை பிடித்து துன்புறுத்தும் போலி கம்யூனிஸ்ட் பினராயி விஜயனை ₹1 கோடி பஸ்சுடன் மானந்தவாடி ஆற்றில் தள்ளுவோம். உங்களை நாங்கள் எச்சரிக்கிறோம். புரட்சி வெற்றி பெறும். வயநாடு மாவட்டத்தில் மானந்தவாடி, கல்பெட்டா, பத்தேரி ஆகிய இடங்களில் நடைபெறும் நவ கேரள சதஸ் நிகழ்ச்சியை நாங்கள் தடுப்போம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவோயிஸ்டுகளின் இந்த மிரட்டல் கடிதத்தால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் பங்கேற்கும் நவ கேரள சதஸ் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கோழிக்கோடு கலெக்டர் அலுவலகத்திற்கும் மாவோயிஸ்டுகளின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்தது. அடுத்த வாரம் இந்த மாவட்டத்தில் நவ கேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

The post ‘பஸ்சுடன் மானந்தவாடி ஆற்றில் தள்ளுவோம்’ கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Maoists ,Kerala ,Pinarayi Vijayan ,Mananthawadi river ,Thiruvananthapuram ,Chief Minister ,Mananthawadi ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள...