×

தொடர் கனமழை… “நீலகிரிக்கு யாரும் வரவேண்டாம்” – ஆட்சியர் அதிரடி உத்தரவு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்தது. இதனால் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மரபாலம் அருகே, கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சபனை அருகே, மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை செல்லும் சாலை மற்றும் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் கெடா மட்டம் அருகே மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேத்தி, பாலாடா பகுதிகலில் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்ததால் பல ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களிலும் புதிதாக அருவிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு மற்றும் மரங்களை அகற்ற 30க்கும் மேற்பட்ட குழுக்கள் ஜேசிபி துணையுடன் சாலையை சீரமைத்து வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு வருவோரின் பயணத்தை இன்று தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையை பொதுமக்கள் இன்று பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீலகிரிக்கு வர வேண்டாம்: கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். சாலை சீரமைப்பு பணிகளுக்காக கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post தொடர் கனமழை… “நீலகிரிக்கு யாரும் வரவேண்டாம்” – ஆட்சியர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ruler ,Nilgiri ,Kotagiri ,Kunnur ,
× RELATED கொடநாட்டில் கொலை நடந்த இடத்தில்...