×

திருச்சி அருகே என்கவுன்டர்: கொல்லப்பட்ட ரவுடியைப் பற்றி பரபரப்பு தகவல்கள்

திருச்சி: திருச்சி அருகே நேற்று என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஜெகனைப்பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சனமங்கலம் வனப்பகுதியில் ரவுடிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் கருணாகரன், எஸ்ஐ வினோத்குமார் மற்றும் போலீசார் நேற்று மதியம் வனப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது, திருச்சி மாவட்டம் சர்க்கார்பாளையம் பனையக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெகன்(எ)கொம்பன் ஜெகதீசன்(33) பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் வனப்பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது ஜெகன் திடீரென பெட்ரோல் குண்டையும், நாட்டு வெடிகுண்டையும் போலீசார் மீது வீசிவிட்டு தப்பி ஓடப்பார்த்திருக்கிறார். ஆனாலும் போலீசார் அவரை சுற்றி வளைத்தபோது எஸ்ஐ வினோத்குமாரை வீச்சரிவாளால் வெட்டியுள்ளார். இதில் எஸ்ஐயின் இடதுகையில் படுகாயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், தற்காப்புக்காக பிஸ்டல் மூலம் 2 ரவுண்டு சுட்ட போது ஜெகனின் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டு பாய்ந்து ஜெகன் இறந்தார். என்கவுன்டர் நடந்த இடத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள வீச்சரிவாள், நாட்டு துப்பாக்கி மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர் மீது 5 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் என தமிழகம் முழுவதும் 53 வழக்குகள் உள்ளது. இவர் மீது 8 முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் நடந்த பல கொலைக்கு இவர் தான் கூலிப்படையின் தலைவனாக செயல்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த எஸ்ஐ வினோத்குமார், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெகனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ரவுடிகளுக்கு அடிக்கடி விருந்து
தோப்பு பகுதிகளுக்கு ரவுடிகளை வரவழைத்து, அங்கு அவ்வப்போது விருந்து கொடுப்பதை ஜெகன் வழக்கமாக வைத்திருந்தார். கடந்த மே 19ம் தேதி ஜெகன் தனது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டாளிகளான ரவுடிகளை நேரில் வரவழைத்து கறி விருந்து வைத்துள்ளார். அப்போது அவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் கார் மீது அமர்ந்து ஊர்வலமாக சுற்றியுள்ளனர். திருவெறும்பூர் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்த ரவுடி ஜெகன் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று என்கவுன்டரில் பலியானது விசாரணையில் தெரியவந்தது.

தம்பி போலீஸ்காரர்
ஜெகனுக்கு ஒரு ஆண்டுக்கு முன் ஈரோட்டை சேர்ந்த ஆர்த்திகா(25) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஜெகனின் சகோதரர் திருச்சி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். ஜெகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவர் 3 ஆண்டுகளுக்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

The post திருச்சி அருகே என்கவுன்டர்: கொல்லப்பட்ட ரவுடியைப் பற்றி பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Rowdy Jagan ,Sirukanur, Trichy ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...