![]()
சென்னை: சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் கைதான 2 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அண்மையில் சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் அமைப்பின் தேசிய தலைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் என்பவரும், தேசிய செயலாளராக உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த நடிகை நமீதா, தன்னுடைய கணவர் சவுத்ரியுடன் கலந்து கொண்டார்.
இதில் அரசு முத்திரை, தேசிய கொடி, பிரதமர் படம், MSME அமைப்பின் முத்திரை ஆகியவற்றை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதாகவும், இதனை நம்பி சிறு, குறு முதலீட்டாளர்களிடம் 50 லட்சத்தை முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் வசூலித்ததாகவும், 9 லட்சத்தை திருப்பி கொடுத்த நிலையில், மீதமுள்ள ரூ.41 லட்சம் தொகையை வழங்கவில்லை என கூறி சூரமங்கலம் காவல் நிலையத்தில் கோபால்சாமி என்பவர் புகார் அளித்திருந்தார். பின்னர் இந்த வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் முத்துராமனுக்கு மட்டும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்டந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சி நடந்ததாகவும், இந்த வழக்கை காவல்துறை மிகைப்படுத்தி காட்டி வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், எந்த மோசடியும் இல்லை என்றும் பணம் வாங்கிய புகாரில் பணத்தை திருப்பி கொடுத்ததால் சமரசம் ஏற்பட்டதாக வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த அறக்கட்டளைக்கும், மத்திய, மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். அதுபோன்ற பெயரை கொண்ட அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் என கூறி பிரதமரின் புகைப்படம், அரசின் சின்னம் மற்றும் முத்திரை ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளதால் அரசின் முக்கிய பிரமுகர் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மத்திய, மாநில அரசின் எந்த அங்கீகாரமும் இல்லாத அமைப்பானது அரசின் சின்னங்களை பயன்படுத்துவதும், பதவிக்காக பணம் பெறுவதும், விஐபி அல்லது உயர் பதவியில் உள்ளவர்களை போல தோற்றத்தை உருவாக்குவதும் அவமானகரமானது என்று கண்டனம் தெரிவித்தார். மகளின் திருமணத்திற்காக இடைக்கால ஜாமின் பெற்ற முத்துராமன், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சமரசம் செய்துள்ளதை சுட்டிக்காட்டி அதிருப்தியும் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் கைதான 2 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.
