×

எனக்கு டீச்சிங் எபிளிட்டியும் இருக்கு!

நன்றி குங்குமம் தோழி

நடிகை சரண்யா பொன்வண்ணன்

நடிகை சரண்யாவிற்கு அறிமுகம் தேவையில்லை. மலையாளத் திரையுலகின் பிரபல இயக்குநர் ஏ.பி.ராஜ் மகள். இயக்குநர் மணிரத்தினத்தின் ‘நாயகன்’ படத்தில் உலக நாயகனின் நாயகியாய் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.சிறிது இடைவெளிக்குப் பின் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி நடிப்பில் கலக்கியவர். ராம், தவமாய் தவமிருந்து, களவாணி, எம்டன் மகன், ஓ.கே.ஓ.கே.,வேலையில்லா பட்டதாரி, தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை எனத் தொடர்ந்து எல்லாவற்றிலும் பல முன்னணி ஹீரோக்களுக்கு விதவிதமான அம்மா கேரக்டரில் அசால்டாய் நடித்து ஹிட் கொடுத்தவர். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றவர்.

நடிகை சரண்யாவோடு சமகாலத்தில் நடித்த திரை நட்சத்திரங்கள் பலரும் தயாரிப்பு, இயக்கம், சின்னத்திரை, ரியாலிட்டி ஷோ எனச் செயல்பட, பெண்களை ஃபேஷன் துறையில் தொழில் முனைவோராய் மாற்றும் முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார் சரண்யா. அவரிடம் பேசியதில்…‘‘சினிமா என் புரொபஷன். ஆனால் எனக்கென ஒரு பாஷன்(passion) இருக்கு. அது தையல் கலை. ஐ லைக் ஃபேஷன் டிசைனிங் அண்ட் ஸ்டிச்சிங். எனக்குத் தெரிந்த கலையை பெண்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை தொழிலதிபர்களாக மாற்ற நினைக்கிறேன்’’ என்றவர், மிகச் சமீபத்தில் ஹோட்டல் ஹயத்தில் தன்னிடம் படித்த மாணவர்களை ஒன்றிணைத்து “ஹவுஸ் ஆஃப் டிஷாஃப்ட்” (House of DSOFT) என்கிற ஆடைகள் கண்காட்சியினை பிரபலங்களை அழைத்து நடத்தியிருக்கிறார்.

‘‘ஒரு கல்லூரியில் நடக்கிற கேம்பஸ் இன்டர்வியூ மாதிரி என்னிடத்தில் படித்த மாணவர்களுக்கான பிளாட்ஃபார்மை உருவாக்கித் தரும் முயற்சி இது. இதில் யார் வேண்டுமானாலும் பார்வையாளர்களாக வரலாம். தொழில்முனைவோராக மாறநினைப்பவரின் விசிட்டிங் கார்ட் பரிமாற்றத்துடன், அவர்களுக்கான பிஸினஸ் ஃப்ளாட்பார்ம் இதில் கிடைக்கிறது’’ என்றவரிடத்தில், அவரின் DSOFT குறித்து கேட்டபோது…

‘‘டிசைனிங் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி என்பதன் சுருக்கமே DSOFT. என்னுடைய ஃபேஷன் ஸ்கூலைத் தொடங்கி 10 ஆண்டுகள் ஆச்சு. ஆறு மாதத்திற்கு ஒரு பேட்ஜ் என மாணவர்களுக்கு நானேதான் வகுப்புகளை எடுக்கிறேன். ஒரு பேட்ஜில் 25 மாணவர்கள். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கிறேன்…’’ நம்பிக்கையோடு முகமெல்லாம் புன்னகைக்கிறார் சரண்யா.

‘‘சினிமாவில் வாய்ப்பு என்பது இன்செக்யூர்டான வேலைதான். நான் கதாநாயகியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே நிலையான வருமானம் தேடணும் என்கிற எண்ணம் இருந்தது. பத்தாயிரம் என்றாலும் முதல் தேதியே அது கைக்கு வரணும். பட்ஜெட்டிற்குள் வாழணும். இதுதான் எனது இயல்பாகவும் இருந்தது.என்னுடைய அம்மா எப்போதும் டெய்லரிங், டிசைனிங், ஆர்ட் வொர்க் என பயங்கர ஆர்வத்துடன் துறுதுறுவென வேலை செய்பவர். எனக்கான உடைகளை அம்மாதான் தைப்பார். அம்மா இறந்த பிறகு, சமையலை அவரிடம் கத்துக்கிட்ட மாதிரி, தையலை கத்துக்கலையே என்கிற ஆதங்கம் மனதில் இருந்தது.

கல்லூரியில் படிக்கும்போதே தையலையும் கற்றுக் கொண்டேன். எனக்கு தைக்கத் தெரியும் என்பதால், என் உடைகள், என் குழந்தைகள் உடைகளை எல்லாம் நானே டிசைன் செய்து தைக்க ஆரம்பித்து அப்படியே நண்பர்களுக்கும் கிஃப்டாக தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். சினிமாவில் பிஸியாக இருந்துகொண்டே தைக்கிறேன் என்பதே நண்பர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஒரு நாளைக்கு மூன்று உடைகளையாவது தைக்கும் வேகம் என்னிடத்தில் இருந்தது. அத்துடன் தையலில் சின்னச் சின்ன நுணுக்கங்களும், சின்னச் சின்ன வேலைப்பாடுகளும் எனக்கு கைவந்தது. விரும்பிக் கேட்கும் தோழிகளுக்கும் சொல்லிக் கொடுக்கும்போது, நான் சொல்லிக் கொடுப்பது எளிமையாகப் புரிவதாய் சொல்லத் தொடங்கினர்.

எனக்கு சொல்லிக் கொடுக்கும் கலை சுலபமாய் வருகிறது, டீச்சிங் எபிளிட்டியும் எனக்கு இருக்கு எனப் புரிய ஆரம்பித்தது. புரியாத ஒருத்தருக்கும் பாடத்தைப் புரியவைத்து நேசிக்க வைக்கணும். அந்தவகையில் இதுவும் கலைதான். பட் டீச்சிங் ஈஸ் நாட் சோ ஈஸி’’ என்றவர், ‘‘ மூன்றையும் ஒரே இடத்தில் வைத்து கற்றுக்கொடுத்து, பெண்களை ஆடை வடிவமைப்பில், தொழில் முனைவோர்களாக உருவாக்க முடியுமா என யோசித்ததில், எனக்குத் தெரிந்த நுணுக்கங்களை எல்லாம் ஸ்கிரிப்டாக்கி, பார்முலேஷன் செய்து, சிலபஸ் பிரேம் செய்தேன்.

சின்னச் சின்ன விசயங்கள்தான் நமது உடையை அழகாக்கும். அதுதான் நமது கிரியேட்டிவிட்டி. என் கிரியேட்டிவிட்டியை டிப்ஸ் அண்ட் டிரிக்ஸ்சுடன் கற்றுக்கொடுக்க ஆரம்பித்ததில் பலரும் ஆர்வமாகினர்.2014ல் என் பயிற்சி பட்டறைக்கு DSOFT என பெயர் சூட்டி, இருபத்தி ஐந்து மாணவர்களோடு முதல் பேட்ஜ் தொடங்கியது. அப்போது எனக்குத் தெரியாது, நான் செய்யப் போகும் இந்த வேலை இன்னும் பெரிதாக விரிவடையப் போகிறது என்று. என்னிடம் கற்க வருபவர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களையே உதவி ஆசிரியர்களாகவும் நியமித்துக் கொண்டேன்.

அதே நேரத்தில் நான் நடிப்பிலும் இருக்கிறேன். நான் ஆரம்பித்த தொழிலை நானேதான் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லைதான். யாரையாவது போட்டு இந்தத் தொழிலை என்னால் தொடர முடியும். ஆனால் என் விருப்பம் அதுவல்ல. நானே முன்நின்று எனது மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது’’ என்றவர், டிசைனிங்… கட்டிங்… ஸ்டிச்சிங் வகுப்புகளை அவரேதான் மாணவர்களுக்கு எடுப்பதாகத் தெரிவிக்கிறார்.

‘‘பல்வேறு விஷயங்களுக்கும் நேரத்தைப் பிரித்து நிர்வகிக்கும் திறமை நமக்குள்ளேதான் இருக்கு. ஆனால் நம்மால் முடியாது என நாமாகவே நினைத்துக் கொள்கிறோம். இதற்கு தொடர்ச்சியாக மெனக்கெடணும். அந்த மெனக்கெடல்தான் உழைப்பு. இது கடினமான பயணம் என்றாலும் அதைக் கடந்தே இந்த இடத்திற்கு நானும் வந்திருக்கிறேன்.

என்னிடத்தில் ரெகுலர் கோர்ஸ் தவிர்த்து அட்வான்ஸ் டெக்னாலஜி கோர்ஸும் இருக்கிறது’’ என்றவர், ஷூட்டிங்கிற்கு நான் வந்தாலும், எனது ஹேண்ட்பேக்கில் நோட்ஸ், புக்ஸ், கரெக் ஷன் நோட்ஸ்கள், ரீரைட், டெக்ஸ் புக் தயார் செய்வதென கொண்டுவந்து ஷூட்டிங் கேப்பில் அவற்றை செய்வதாகத் தெரிவித்து, மீண்டும் அதே புன்னகையை வெளிப்படுத்த, பல்வேறு படங்களில் நாம் பார்த்து ரசித்த நடிகை சரண்யாவின் முகம் மறைந்து நமக்கும் டீச்சர் சரண்யாவே கண்முன்பு தென்பட்டார்.

மேலும் நம்மிடத்தில் பேசியவர்… ‘‘கோவிட் நேரத்தில் கிடைத்த ஓய்வை பயனுள்ளதாய் மாற்றியது நானாகத்தான் இருப்பேன். என் கணவரின் உதவியில், அவரே கேமராமேன்… லைட்ஸ் மேன்… எடிட்டர் எனச் செயல்பட, நான் டிசைனிங்…

கட்டிங்… ஸ்டிச்சிங் என வகுப்பு எடுக்கும் வீடியோக்கள் தயாரானது. வகுப்புகளை கேமராவில் பதிவு செய்தபோதுதான், ‘இத்தனை கஷ்டப்பட்டா நீ பாடம் எடுக்கிறாய்’ என என்னைப் பார்த்து அவர் ரொம்பவே ஆச்சரியப்பட்டார். அதுவரை என் உழைப்பு அவருக்குத் தெரியாது. அதன் பிறகே என் மீதான மதிப்பும், மரியாதையும் அவருக்கு உயர ஆரம்பித்து, இன்று என் தொழிலில் அவரின் ஒத்துழைப்பும் இருக்கிறது.

வீட்டையும் கவனித்துக்கொண்டு, வருமானமும் ஈட்ட முடியும் என்பதால், பெண்கள் ஃபேஷன் துறையை அதிகம் விரும்புகிறார்கள். பெரும்பாலும் வீட்டில் வைத்தே தைப்பது, டிசைனராவது, பொட்டிக் நடத்துவது, ஆன்லைன் பிஸினஸ் என்றே பெரும்பாலும் பெண்கள் செயல்படுகிறார்கள்.கடந்த பத்து ஆண்டுகளில் என்னிடம் கற்று வெளியேறிய மாணவர்களை ஒன்றிணைத்து, களம் அமைத்து, இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறேன். இதற்குப் பின்னால் என் உழைப்பு தொடர்ச்சியாக இருக்கிறது.

அதேபோல் மாணவர்களின் முன்பு நடிகை சரண்யாவாக நான் எப்போதும் வெளிப்படுவதில்லை. அவர்களும் என்னை நடிகையாக பார்ப்பதில்லை. காரணம், எனக்கு என்னுடைய சப்ஜெக்டில் நாலேஜ் அதிகம். டிசைனிங் தொடர்பாக அவர்கள் என்னிடம் என்ன கேட்டாலும் என்னால் சொல்லிக் கொடுக்க முடியும் என்பதே இதற்குக் காரணம். அதனால்தான் என் மீது ஆசிரியர் என்கிற மதிப்பும் மரியாதையும் அதிகமாகவே இருக்கிறது.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post எனக்கு டீச்சிங் எபிளிட்டியும் இருக்கு! appeared first on Dinakaran.

Tags : Kumkum Dodhi ,Saranya Ponvannan ,Saranya ,AP ,Raj ,
× RELATED ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப்...