×

கோவையில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

கோவை: கோவையில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை புறநகர் மற்றும் நகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மதுக்கரை, பெரியநாயக்கம் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக நொய்யலாற்றில் நீர்வரதானது அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆலந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருபுறங்களிலும் தரையை ஒட்டியவாறு நொய்யல் ஆற்றில் நீர் வந்து கொண்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பெரியநாயக்கம் பாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு பெரியநாயகம் பாளையம் கோட்டைபிரிவு என்ற இடத்தில் இருந்த தரைப்பாலத்தை கடக்க முயன்ற 19வயது இளைஞர் பிரதீப் என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து பெரியநாயக்கம் பாளையம் தீயணைப்பு துறையினர் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தடாகம் தாடியூர் பகுதியில் தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி அதிகளவு நீர் சென்றபோது பெண் உட்பட 5 பேர் நீரில் சிக்கிக்கொண்டனர். இதை அடுத்து தீயணைப்பு துறையினர் கயிறு மூலமாக 5 பேரையும் மீட்டனர். மேலும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

The post கோவையில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Noyal river ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...