×

எத்துணையோ காயங்களை ஆற்றிய பிறகு உன்னை டாக்டர் என்கிறார்கள் : பாடகி பி.சுசீலாவுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம்

சென்னை : பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணி பாடகி இசைக்குயில், மெல்லிசை அரசி பி.சுசீலா.ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல இந்திய மொழிகளில் 40 ஆண்டு காலமாக 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.இசையரசியான இவரை கவுரவிக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தனது கவிதை பாணியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

“நீ
மலர்ந்தும் மலராத பாடியபோது
என் பாதிமலர்க் கண்களில்
மீதி மலர்க் கண்களும்
மென்துயில் கொண்டன

சிட்டுக் குருவி
முத்தம் கொடுத்தபோது
எனக்கு முதல்மீசை முளைத்தது

உன்
கங்கைக்கரைத் தோட்டத்தில்
நான் கால்சட்டை போட்ட
கண்ணனானேன்

சொன்னது நீதானாவென்று
சொற்களுக்கிடையில்
விம்மிய பொழுது
என் கண்களில்
வெளியேறியது ரத்தம்
வெள்ளை வெள்ளையாய்

காலமகள் கண்திறப்பாள்
பாடியபோது
என் எலும்பு மஜ்ஜைகளில்
குருதியும் நம்பிக்கையும்
சேர்ந்து சுரந்தன

நீ காதல் சிறகைக்
காற்றினில் விரித்தபோது
ஒரு தேவதையின் சிறகடியில்
என் காதல் சம்பவம் நிகழ்ந்தது

நீ கண்ணுக்கு மையழகு
பாடவந்தபோது
சந்திரனும் சூரியனும்
நட்சத்திரமும் கூழாங்கல்லும்
என் தமிழும் அழகாயின

எத்துணையோ
காயங்களை ஆற்றியபிறகு
உன்னை டாக்டர் என்கிறார்கள்

வாழ்க நீ அம்மா!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post எத்துணையோ காயங்களை ஆற்றிய பிறகு உன்னை டாக்டர் என்கிறார்கள் : பாடகி பி.சுசீலாவுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,P.Susheela. ,Chennai ,Vairamuthu ,B.Susheela. ,India ,B.Susheela ,
× RELATED ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: கவிஞர் வைரமுத்து