×

சென்னையில் எந்த இடத்திலும் தேங்காதவாறு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்றும் பணிகள்: மேயர் பிரியா தகவல்

சென்னை, நவ. 23: ‘‘மாநகரின் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காதவாறு, சென்னையில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது’’ என்று சென்னை மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவ மழை பெய்து வருவதை யொட்டி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வரால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு பரிந்துரையின் அடிப்படையில் கூடுதலாக 876.19 கி.மீ., மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள வண்டல் வடிகட்டி தொட்டியில் மழைநீர் தேங்கும் இடங்கள், கால்வாய் நீர், பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழை விட்டதும் வேகமாக வடியும் நிலைமை காணப்பட்டு சுரங்கப்பாதைகள் போன்றவையிலும் மழைநீர்த் தேக்கம் இல்லாத நிலைமை காணப்படுகிறது. முன்பு 500 இடங்களில் மழைநீர்த் தேக்கம் காணப்பட்டது. தற்போது அது 37 இடங்கள் என குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அனைத்து பணியாளர்களும், சுழற்சி முறையில் காலை, மாலை மற்றும் இரவில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. வடசென்னை மற்றும் தென்சென்னையில் 12 மணி முதல் 3 மணி வரை குறுகிய நேரத்தில் பெய்த மழையால், சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி, நேற்று ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் எழும்பூர் பகுதியில் மிக கன மழை பெய்தது. தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட இளையமுதலி தெரு மற்றும் வ.உ.சி. நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனை போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் 5 மோட்டார் இயந்திரங்கள் பயன்படுத்தி அகற்றினர். இதை தொடர்ந்து, மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் சம்பவ இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: மழை அதிகமாக பெய்த காரணத்தினால் மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு 150 மோட்டார் பம்புடன் கூடிய டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, அங்காளம்மன் கோயில் தெரு, அழகப்பா தெரு, வியாசர்பாடி போன்ற இடங்களில் குறுகிய நேரத்தில் மிக அதிகமான மழை பெய்த காரணத்தால் உள்ளூர் சங்கத்தினர் மற்றும் மாநகராட்சி உதவியுடன் மழைநீர் அகற்றப்பட்டன.
சென்னை மாநகரம் 426 சதுர கி.மீ. கொண்டது. இவற்றில், 35 ஆயிரம் சாலைகள் 5800 நீளமுள்ள சாலைகள் உள்ளன. 19 நெடுஞ்சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சேவைத்துறைகள் பயனுள்ள திட்டங்கள் நடைபெறும் பரங்கிமலை, பூந்தமல்லி, ஆற்காடு ரோடு, போரூர், தியாகராயா நகர் சுற்றியுள்ள பகுதிகள், பசுமைவழிச் சாலை, ஆர்.கே.மடம் சாலை, ஓ.எம்.ஆர். சாலை போன்ற இடங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அவ்வப்போது மழை பெய்யும் போது உடனுக்குடன் மழைநீரை அப்புறப்படுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை சந்திப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் இதர துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சேவை பணிகளால் சேதமடைந்த சாலைகளை மற்றும் பள்ளங்களை உடனுக்குடன் சரி செய்யும் பணிகளையும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மழைநீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட களப்பணி நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள் விழிப்புணர்வுடன் பணியாற்ற அறிவுரை
தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-40, வ.உ.சி. நகர், இளையா தெருவில் தேங்கிய மழைநீரை டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்பு மூலம் மழைநீர் வடிகாலில் வெளியேற்றும் பணிகளை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ேநற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறின்றி மழைநீரை விரைந்து வெளியேற்றிடவும், தொடர்ந்து விழிப்புணர்வுடன் பணியாற்றிடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். முன்னதாக, திரு.வி.க. நகர் மண்டலம் அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் சிவராவ் தெருவில் டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியையும், டிமல்லஸ் சாலையில் உள்ள மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டனர். அதேபோன்று, துணை மேயர் மகேஷ்குமார், அண்ணாநகர் மண்டலம், வார்டு-99, புரசைவாக்கம், ராஜா அண்ணாமலை மற்றும் அழகப்பா சாலைகளில் நடந்து வரும் மழைநீர் வெளியேற்றும் களப்பணி நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், கவுன்சிலர் குமாரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சென்னையில் எந்த இடத்திலும் தேங்காதவாறு போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்றும் பணிகள்: மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayor Priya ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்