×

பொதுமக்களின் குறைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க மக்களுடன் முதல்வர் திட்டம் பூந்தமல்லியில் தொடக்கம்:  கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு  15 நாட்களில் தீர்வு என அறிவிப்பு

பூந்தமல்லி, நவ. 23: பூந்தமல்லியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், கிருஷ்ணசாமி எம்எல்ஏ, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
தமிழக அரசு சார்பில், பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பூந்தமல்லி குமணன்சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் தர், நகராட்சி ஆணையர் லதா, நகர செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர் மன்ற உறுப்பினர்கள் பூவை ஜேம்ஸ், சௌந்தரராஜன், மீனாட்சி ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கலந்துகொண்டு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி இருப்பதால், அந்த பள்ளியில் புதிதாக ஆய்வுக்கூடம் அமைத்து தர வேண்டும் என முதல் நபராக மாவட்ட கலெக்டரிடம் மனுவை அளித்தார். மனுவை பெற்றுகொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த திட்ட முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவ துறை, மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை, வீட்டு வசதி துறை, காவல்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன.

இம்முகாமில், பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 18, 19, 20, 21 ஆகிய வார்டுகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். புதிய மின் இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர் மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்து வரி பெயர் மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நில அளவை, இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பித்தனர். பின்னர், பெறப்படும் மனுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாரிவாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ் குமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதிநாதன், வட்டாட்சியர் மாலினி, ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரிகந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அகரம் மேல் ரவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிவகாமி சுரேஷ், கன்னியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மாவட்ட முன்னோடி வங்கி திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன.

The post பொதுமக்களின் குறைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க மக்களுடன் முதல்வர் திட்டம் பூந்தமல்லியில் தொடக்கம்:  கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு  15 நாட்களில் தீர்வு என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,MLA ,Chief minister ,Krishnasamy ,Tiruvallur ,Collector ,Prabhu Shankar ,
× RELATED பூந்தமல்லியில் தனியார் பெண்கள்...