×

பெரும்புதூரில் கல்விக்கடன் முகாம் 112 பயனாளிகளுக்கு ₹12.39 கோடி கடனுதவி ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம், நவ.23: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, பெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்து, 112 பயனாளிகளுக்கு ₹12.39 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கலைஞரின் நூற்றாண்டு விழா, கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன், 33 பொறியியல் கல்லூரிகளில் 30,903 மாணவர்களும், 16 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 11,988 மாணவர்களும், 15 தொழில்நுட்ப கல்லூரிகளில் 6456 மாணவர்களும், 5 மருத்துவ கல்லூரிகள் மற்றும் 17 பாராமெடிக்கல் கல்லூரிகளில் 17,100 மாணவர்களும் என மொத்தம் 86 கல்லூரிகளில் 66,447 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் 3,170 மாணவர்களுக்கு, ₹155 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது‌. நடப்பு ஆண்டு 2023-2024 ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 608 மாணவர்களுக்கு ₹58.99 கோடி கல்விக்கடனாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.இ., எம்பிபிஎஸ் நர்சிங், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடனானது இந்தியாவிற்குள் பயிலும் மாணவர்களுக்கு, ₹50 லட்சம் வரையிலும், வெளிநாடுகள் சென்று பயிலும் மாணவர்களுக்கு ₹1.50 கோடி வரை வழங்கப்படுகிறது. இதில் ₹7 லட்சத்து 50 ஆயிரம் வரை எவ்வித உத்திரவாதம் இன்றி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு, பெரும் கல்விக்கடனை மாணவர்கள் 15 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தலாம்.

அதன்படி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இணையதளம் மூலமாக கல்விக்கடன் பெற மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Vidhyalakshmi Portal’ (www.vidhyalakshmi.co.in) குறித்து மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘Education Loan Mela’ நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை மூலமாக அறிவுரைகள் பெறப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து ‘Vidhyalakshmi Portal’ குறித்த பதிவு முறைகளை எடுத்துரைத்ததோடு அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சென்று ‘Vidhyalakshmi Portal’ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழாவில், பல்வேறு வங்கிகள் மூலமாக Spot Registration மேற்கொள்ள அனைத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகள் மூலமாக இன்றைய தினம் 112 பயனாளிகளுக்கு, ₹12.39 கோடிக்கான கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி.கருணாநிதி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராமன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் சிக்ரிலால், உள்ளாட்சி பிரிதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரும்புதூரில் கல்விக்கடன் முகாம் 112 பயனாளிகளுக்கு ₹12.39 கோடி கடனுதவி ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Perumbudur ,Minister ,Th.Mo.Anparasan ,Kanchipuram ,Kanchipuram District Administration ,District Pioneer Bank ,Engineering College ,Perumbudur… ,Perumbudur Education Loan Camp ,Thamo.Anparasan ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...