×

கொட்டும் மழையிலும் 63 நாயன்மார்கள் மாடவீதியில் பவனி மாணவர்கள் நனைந்தபடி தோளில் சுமந்து சென்றனர் திருவண்ணாமலை தீபத்திருவிழா 6ம் நாள்

திருவண்ணாமலை, நவ.23: திருவண்ணாமலையில் நேற்று நடந்த கார்த்திகை தீபத்திருவிழா 6ம் நாள் உற்சவத்தில், 63 நாயன்மார்கள் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலித்தனர். அப்போது, கொட்டும் மழையில் வீதியுலா நடந்தது.
சைவம் வளர்த்த சிவனடியார்கள் 63 நாயன்மார்கள் என போற்றப்படுகின்றனர். சிவாலயங்களில் நாயன்மார்கள் வழிபாடு முக்கியத்தும் பெற்றதாகும். சைவத்தின் வழிநின்று தமிழ் வளர்த்ததிலும் நாயன்மார்களின் தொண்டு தனித்துவமானது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் 2ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களும் திருவுருவமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். குறிப்பாக, இறைவனுக்காக தன் கண்களையே இழக்க துணிந்த கண்ணப்ப நாயனாருக்கு, கிரிவலப்பாதையில் தனியாக கோயிலும் அமைந்திருக்கிறது.

இந்நிலையில், எந்நாட்டவர்க்கும் இறைவன், தென்னாடுடைய சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக எழுந்தருளிய திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6ம் நாள் உற்சவத்தில், நாயன்மார்கள் வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி, தீபத்திருவிழாவின் 6ம் நாள் உற்சவமான நேற்று சமயக்குரவர் நால்வர் என போற்றப்படும் திருநாவுகரசர், சுந்தரர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் பிரத்யேகமான தனி வாகனத்திலும், நாயன்மார்கள் தனித்தனி வாகனங்களிலும் கொட்டும் மழையிலும் மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தனர். அப்போது, 63 நாயன்மார்களின் திருவீதியுலா வாகனங்களை மழையில் நனைந்தபடி பள்ளி மாணவர்கள் தங்கள் தோளில் சுமந்துச் சென்றனர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மாட வீதியின் பல்வேறு இடங்களில் அன்னதானம், பால் வழங்கப்பட்டது.

The post கொட்டும் மழையிலும் 63 நாயன்மார்கள் மாடவீதியில் பவனி மாணவர்கள் நனைந்தபடி தோளில் சுமந்து சென்றனர் திருவண்ணாமலை தீபத்திருவிழா 6ம் நாள் appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Tiruvannamalai Deepatri Festival ,Thiruvannamalai ,Kartika Deepatri festival ,Tiruvannamalai ,Mata ,Thiruvannamalai Deepatri Festival ,
× RELATED ரத்னம் விமர்சனம்