×

ஜம்முவில் தீவிரவாதிகள் வெறிச்செயல் 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 வீரர்கள் பலி: கூடுதல் படைகள் குவிப்பு; கடும் சண்டை நீடிப்பு

ரஜோரி: ஜம்முவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. இதில் துப்பாக்கி சூட்டின்போது 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாஜிமால் பகுதியில் தீவிரவாதிகள் 2 பேர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர்.

பாஜிமால் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது, திடீரென ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 கேப்டன்கள் உள்பட 4 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். ஒரு மேஜர் மற்றும் ஒரு வீரர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

என்கவுன்டர் நடந்த குலாப்கார்க் வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிக்கும் பணி நீடித்து வருகின்றது. அந்த இடத்தில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை முறியடிக்க கூடுதல் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். எனவே அந்த பகுதி மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மூடப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஜிமாலில் சுற்றித்திரிந்த அவர்கள் வெளிநாட்டினர் என்றும், ஞாயிற்றுக்கிழமை முதல் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும் ராணுவத்திடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஜம்முவில் இந்த ஆண்டு 26 வீரர்கள் உள்பட 120 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்பான வன்முறையில் 81 தீவிரவாதிகள் மற்றும் 26 பாதுகாப்புப் படையினர் உட்பட 120 பேர் கொல்லப்பட்டனர். ஜம்முவில் உள்ள மூன்று மாவட்டங்களில் மட்டும் இந்த ஆண்டு 14 பாதுகாப்புப் படையினர் மற்றும் 25 தீவிரவாதிகள் உட்பட 46 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரில் இந்த ஆண்டு தீவிரவாதம் அதிகரித்து இருப்பதை இது காட்டுகிறது.

கடந்த ஏப்ரல் 20 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் பூஞ்சின் மெந்தார் பகுதியிலும், ரஜோரியின் கண்டி வனப்பகுதியிலும் இரண்டு முறை பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் ஐந்து கமாண்டோக்கள் உட்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரஜௌரி மற்றும் பூஞ்ச் ​​மற்றும் அருகிலுள்ள ரியாசி மாவட்டங்களில் தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளில் 46 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ரஜோரியில் 7 தீவிரவாதிகள், 9 பாதுகாப்புப் படையினர் உட்பட 23 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பூஞ்ச் ​​மாவட்டத்தில் 15 தீவிரவாதிகளும் 5 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ரியாசி மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஜம்முவில் தீவிரவாதிகள் வெறிச்செயல் 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 வீரர்கள் பலி: கூடுதல் படைகள் குவிப்பு; கடும் சண்டை நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Jammu ,Rajori ,Dinakaran ,
× RELATED பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்