×

50 பணயக்கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ் காசாவில் 4 நாள் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

ஜெருசலேம்: காசாவில் 46 நாள் போருக்கு பிறகு முதல் முறையாக 4 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள 50 பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்த போர் நிறுத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையேயான போர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை இப்போரில் காசாவில் 11,400 பேர் பலியான நிலையில், 17 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். வடக்கு காசாவில் அனைத்து கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், தெற்கு காசாவில் உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரத்திற்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட கத்தார், எகிப்து, அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட 240 பணயக் கைதிகளில் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு பதிலாக தற்காலிக போர் நிறுத்தம் செய்வது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின் வாக்கெடுப்பு நடத்தி, 4 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

6 வார போருக்குப் பிறகு, தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதில் இஸ்ரேல் தனது ராணுவ தாக்குதலை நிறுத்தும். ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள 240 பணயக் கைதிகளில் பெண்கள், குழந்தைகள் என 50 பேர் விடுவிக்கப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் 12 பேர் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர கூடுதலாக விடுவிக்கப்படும் 10 பணயக்கைதிகளுக்கு கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் செய்யவும் இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இன்று முதல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும், பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் எகிப்து அரசு டிவி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்த போர் நிறுத்தத்துடன் இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் காசாவில் கூடுதல் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிக்கையில் இந்த 2 அம்சங்களும் இடம் பெறவில்லை. அதே சமயம், தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இவ்விரு 2 அம்சங்களும் இருப்பதாக கத்தார் அரசு உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பணயக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதால் இஸ்ரேலில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

* போர் தொடரும்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘‘பணயக் கைதிகள் அனைவரையும் மீட்டு அழைத்து வர இஸ்ரேல் அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கான முதல்படி இது. தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த பிறகு மீண்டும் போர் தொடரும். நாங்கள் போர்க்களத்தில் தான் இன்னும் இருக்கிறோம். எல்லா இலக்கையும் அடையும் வரை தொடருவோம்’’ என்றார். ஹமாசை கூண்டோடு அழிக்கும் வரை போர் புரிவதாக இஸ்ரேல் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

* போர் நிறுத்தத்தால் இஸ்ரேலுக்கு பாதிப்பா?
இந்த தற்காலிக போர் நிறுத்தம் பல வழிகளிலும் இஸ்ரேலை பலவீனப்படுத்தும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். காசாவில் ஏற்படும் எந்த ஒரு அமைதியும், போரில் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு ஹமாஸ் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். இப்போரில் ஹமாசின் ஆயிரக்கணக்கான போராளிகளை கொன்று விட்டதாக இஸ்ரேல் கூறி உள்ளது. ஆனாலும், ஹமாசின் பெரும்பாலான சுரங்க பதுங்குமிடங்கள், பாதாள வசிப்பிடங்கள் இன்னும் அப்படியே இருப்பதையும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்தால் காசாவில் ஏற்பட்டுள்ள முழு அளவிலான சேதம் வெளிப்படையாக தெரியும் பட்சத்தில் நிரந்த போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தம் இஸ்ரேலுக்கு அதிகரிக்கும். மேலும், இஸ்ரேலின் போர் தயார்நிலையையும் பாதிக்கலாம்.

The post 50 பணயக்கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ் காசாவில் 4 நாள் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Jerusalem ,Israel cabinet ,Gaza… ,Gaza ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...