×

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.929.37 கோடியில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.929.37 கோடியில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; நகர்ப்புர பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது, கழிவுநீர், கசடு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரின் மறுசுழற்சி/மறுபயன்பாடு, கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது மற்றும் பசுமை வெளிகள், பூங்காக்கள் உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பங்களிப்புகளுடன், அடல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டம் 2.0 (அம்ரூத் 2.0) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்சார்பில் அம்ரூத் 2.0 . திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.330.12 கோடி மதிப்பீட்டில் காரைக்குடி, இராஜபாளையம் நகராட்சிகள், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சிராப்பள்ளி, தாம்பரம், கடலூர், ஈரோடு, ஆவடி மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 24×7 குடிநீர் வழங்கல் முன்னோடித் திட்டங்களை (24×7 water supply system to the selected pilot water zones) செயல்படுத்த முதலமைச்சர் நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் காரைக்குடி நகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.33.71 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.452.42 கோடி மதிப்பீட்டிலும், பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவும் நிருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் மொத்தம் ரூ.11.07 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை புனரமைக்கும் 17 பணிகளும், ரூ. 8.94 கோடி மதிப்பீட்டில் பசுமை வெளிகள், பூங்காக்களை உருவாக்குவதற்கான 27 பணிகளும் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளுக்கு மொத்தம் ரூ.46.74 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் செயலாக்கப்படவுள்ளன. மேலும், பல்வேறு பேரூராட்சிகளில் மொத்தம் ரூ.17.49 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை புனரமைக்கும் 59 பணிகளும், ரூ.27.91 கோடி மதிப்பீட்டில் பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்களை உருவாக்குவதற்கான 110 பணிகளும் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.0.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.929.37 கோடி மதிப்பீட்டில் 230 பணிகளை செயலாக்க முதலமைச்சர் நிருவாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட நகரங்கள், அவற்றின் குடிநீர் தேவையில் தன்னிறைவை பெறவும், கழிவுநீரை பாதுகாப்பான முறையில் சுத்திகரிக்கவும், நீர்நிலைகளை மேம்படுத்தவும் அதன் மூலம் குடிநீர் ஆதாரங்களை உறுதிப்படுத்தவும் ஏதுவாக அமையும். மேலும், பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள், இந்நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.

The post அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.929.37 கோடியில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...