×

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போர்நிறுத்தம் தேவை, அதற்கு இந்தியா தூது செல்ல வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இஸ்ரேல் -ஹமாஸ் நிரந்தர போர்நிறுத்தம் தேவை, அதற்கு இந்தியா தூது செல்ல வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்க இரு தரப்பும் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் நிம்மதியளிக்கின்றன. இந்தப் போரில் பெண்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு அமைதியை உருவாக்கும் வகையில் நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான போர் மூண்டிருக்கிறது.

இப்போரில் பாலஸ்தீனத் தரப்புக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. பாலஸ்தீனத் தரப்பில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் வலியுறுத்தின. அதைத் தொடர்ந்து கத்தார் நாட்டு அரசு இரு தரப்பினரிடமும் பேசியதன் பயனாக 4 நாட்கள் போர்நிறுத்தம் செய்ய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்பது குறித்து சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என்று கத்தார் அரசு தெரிவித்திருக்கிறது. ஏவுகணை வீசித் தாக்கும் ஓசையும், மரண ஓலங்களும் மட்டுமே கேட்டு வந்த கசா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்பட்டிப்பது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தக் காலத்தில் ஹமாஸ் தரப்பிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் 240 பேரில் 50 பேரும், இஸ்ரேல் சிறைகளில் வாடும் பாலஸ்தீனர்களில் 150 பேரும் விடுதலை செய்யப்படவுள்ளனர். மனிதநேயத்துடம் கத்தார் நாட்டு அரசு மேற்கொண்ட இந்த மத்தியஸ்தம் பாராட்டத்தக்கது. இஸ்ரேல் பகுதியில் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கு இது நல்லத் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், 4 நாட்கள் போர் நிறுத்தம் முடிவடைந்த பிறகு மீண்டும் போர் தொடங்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் அறிவித்திருப்பது தான் கவலை அளிக்கிறது. இஸ்ரேல், ஹமாஸ் மீண்டும் தொடங்கினால் அது பேரழிவாக மாறும் என்பதில் அய்யமில்லை. இந்தப் போரில் பாலஸ்தீன நாட்டு மக்களுக்குத் தான் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தெரிகிறது.

இது தடுக்கப்பட வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் தொடங்கி இப்போது வரை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்திரா காந்தி காலத்தில் இந்தியாவுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையிலான உறவுகள் உச்சத்தை அடைந்தன. இப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டுள்ள போதிலும், போரில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது என்று இந்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று பாலஸ்தீனம் உள்ளிட்ட பல நாடுகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பெருங்கடமை இந்தியாவுக்கு உள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிடமும் இந்தியா நல்லுறவை கடைபிடித்து வருவதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும், மரியாதையும் உயர்த்தும். இந்தியாவின் சொல்லுக்கு இரு நாடுகளும் மதிப்பளிக்கும் என்பதால், இந்த முயற்சிகளை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். பேரழிவை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போர்நிறுத்தம் தேவை, அதற்கு இந்தியா தூது செல்ல வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Israel ,India ,PML-N ,Anbumani Ramadoss ,CHENNAI ,Hamas ,PMC ,President ,Anbumani… ,PMK ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...