×

சுவாமியே சரணமய்யப்பா: ஐயப்ப சுவாமி வழிபாட்டில் நெய் தேங்காயின் முக்கியத்துவம் என்ன?

சபரிமலை பக்தர்கள், இருமுடியில் சுமந்து செல்லும் நெய் தேங்காய் மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியது. ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகிக்கப்பட்ட நெய்ப்பிரசாதத்தை உட்கொண்டால், தீராத நோயும் தீரும்; தீய சக்திகளெல்லாம் விலகி ஓடும்.

கார்த்திகையும் மார்கழியும் ஐயப்ப வழிபாட்டுக்கான மாதங்கள். முறையாக மாலையணிந்து, விரதம் மேற்கொண்டு, சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்லும் பக்தர்கள் லட்சக்கணக்கான பேர் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஐயப்ப சுவாமியைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சபரிமலைக்குச் செல்லும் போது குருநாதரின் துணையுடனும் வழிகாட்டுதலுடனும் செல்லவேண்டும். அதேபோல், இருமுடி கட்டிக்கொண்டு செல்லவேண்டும்.

இருமுடியில் உள்ள முக்கியமான பொருட்களில் ஐயப்பனுக்குச் செலுத்தும் நெய் தேங்காய், மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறது சபரிமலை ஸ்தல புராணம்.

இருமுடி கட்டும்போது, முன்னதாகவே தேங்காயின் ஒரு கண்ணில் மெல்லிய துவாரமிட்டு, உள்ளே இருக்கும் இளநீரை எடுத்துவிடுவார்கள். பிறகு அந்தத் தேங்காயை காயவைப்பார்கள். இருமுடி கட்டும்போது அந்தத் தேங்காயை ஒவ்வொரு இருமுடியில் வைப்பதற்கும் தயாராக வைத்திருப்பார்கள்.

பிறகு, விரதம் மேற்கொண்டு சபரிமலைக்குக் கிளம்பும் சாமிமார்களை அழைப்பார்கள். இருமுடியை எடுத்து தயாராக வைத்துக்கொள்வார்கள். மலைக்கு விரதம் மேற்கொண்டிருக்கும் சாமி, அந்தத் தேங்காயை கையில் பக்தியுடன் ஏந்தியபடி இருக்க, காய்ச்சிய பசும்நெய்யை, தேங்காயின் துவாரத்தின் வழியே நிரப்பி, சரண கோஷங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க, பூர்த்தி செய்வார்கள். விரதமிருக்கும் சாமிமார்களின் குடும்பத்தாரும் உறவினர்களும் நண்பர்களும் கூட அதில் நெய்யூற்றுவார்கள்.

நெய்தேங்காய் சொல்லும் தத்துவம்?

தேங்காயின் மேல் ஓடு என்கிற பகுதிதான் நம்முடைய உடல். இந்தத் தேங்காய்க்குள் விடப்பட்டிருக்கும் நெய் என்பது நம் உடலிலுள்ள உயிர். உடலுக்குள் உயிரான தேங்காயையும் அதனுள் இருக்கிற நெய்யையும் பத்திரமாக எடுத்துச் சென்று, ஐயன் ஐயப்ப சுவாமியின் திருவடியில் சமர்ப்பித்து, அந்த தேங்காய்க்குள் இருக்கும் நெய்யை ஐயப்ப சுவாமியின் அபிஷேகத்துக்கு வழங்கவேண்டும். அதாவது ‘ஐயப்ப சுவாமியே. உன் பக்தனாகிய நான் உடலையும் உயிரையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன்’ என்று ஐயனை முழுமையாக சரணடைவதான தத்துவம்.

அபிஷேகம் முடிந்ததும், தேங்காயை சபரிமலை ஐயப்ப சந்நிதியில் இருக்கும் கணபதியின் சந்நிதிக்கு எதிரே உள்ள ஹோமகுண்டத்தில் எறிந்துவிடவேண்டும் என்பது ஐதீகம்.

அதாவது நம் உயிரை ஐயன் ஐயப்ப சுவாமிக்கு வழங்குகிறோம். நம்முடைய உடலை அக்னிக்கு அர்ப்பணிக்கிறோம். அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை, பிரசாதமாக வழங்குவார்கள். இந்த அபிஷேக நெய்ப் பிரசாதத்தை, வீட்டுக்கு எடுத்து வந்து, நம்முடைய இல்லத்தாருக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் நண்பர்களுக்கும் வழங்கவேண்டும். சபரிகிரி வாசனுக்கு அபிஷேகிக்கப்பட்ட நெய்யானது, தீராத நோயையும் தீர்க்கும் பிரசாதம். தீய சக்திகளையெல்லாம் அழிக்கும் பிரசாதம்.

The post சுவாமியே சரணமய்யப்பா: ஐயப்ப சுவாமி வழிபாட்டில் நெய் தேங்காயின் முக்கியத்துவம் என்ன? appeared first on Dinakaran.

Tags : Swami Saranamayyappa ,Ayyappa ,Swami ,Sabarimala ,Irumudi ,Charanamayyappa ,
× RELATED சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்