×

ஆன்மிகம் பிட்ஸ்: ஐயப்ப வழிபாட்டில் திருநீறு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கார்த்திகை மோமவாரம்

சிவபெருமானுக்குரிய எட்டுத் தலையான விரதங்களில் சோமவார விரதம் எனப்படும் திங்கட்கிழமை விரதம் தனிச் சிறப்பு மிக்கதாகும். கார்த்திகை மாதத்துச் சோமவாரத்தில் விரதமிருப்பது மிகவும் புண்ணியம் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாத திங்கட்கிழமையன்று பௌர்ணமி கூடி வரும் போது அது மும்மடங்கு பலன் தருவதாகும்.

சபரிமலை

ராமனின் தரிசனத்திற்காக சபரி எனும் வேடுவ குலப் பெண், தான் ருசிப்பார்த்து நல்ல சுவையுள்ள கனிகளை ராமனுக்கு அளித்து, தன் அன்பை வெளிப்படுத்திய தலம்.

இருமுடி தத்துவம்

சபரிமலையை நோக்கி புறப்படும் பக்தர்கள் இருமுடி கட்டி புறப்படுவார்கள். இவற்றுள் ஒரு முடியில் சுவாமிக்குரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் அவர்கள் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். மலையை நோக்கி அவர்கள் செல்லச் செல்ல உணவுப் பொருட்கள் குறைந்து கொண்டே போய் இறைவனின் சந்நிதானத்தருகே செல்லும்போது அவர்களின் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும்.

சுவாமிக்குரிய பொருட்கள் அடங்கிய முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும். இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துகிறது. மானுடராய்ப் பிறந்த நாம் இறைவனைத் தேட ஆரம்பிக்கும் போது இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும் நம் உலக தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடனேயேதான் நாம் இறைவனைத் தேடுகிறோம். அந்த தேடலில் மெய் ஞானம் கிட்டக் கிட்ட நம் லௌகீகப்பற்று குறைந்து மறைந்து போகிறது. இறைப் பக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப்பொழுதான் இறைவனடியும் தரிசனமாகிறது. இதுவே இருமுடி உணர்த்தும் தத்துவமாகும்.

சங்கரர் சுட்டும் சாஸ்தா

சாஸ்தா, அஞ்ஞானத்தின் உருவான அசுரசக்திக்கும் ஞான வடிவான இறைசக்திக்கும் நடக்கும் போராட்டத்தில் ஞானம் அடையும் வெற்றியை தன் லீலையால் உணர்த்துகிறான். அத்வைத சத்தியத்தை நிலைநாட்டத் தோன்றிய சர்வேசனின் அவதாரமான ஆதிசங்கரர். இந்த உண்மையை நன்குணர்ந்து, நமது சனாதன மதத்தினை ஆறு பிரிவுகளாக சைவ – வைஷ்ணவ – சாக்த – கௌமார – காணாபத்ய – சௌர மதங்களாக வகுத்தார்.

ஓங்காரத்தின் வடிவே விநாயகன்! அதை உணர்த்தும் ஞானத்தின் உருவே வேலவன்! தன்மயான உலகினை தன்னின்றும் தோற்றுத்து மீண்டும் தன்னிடத்திலேயே லயப்படுத்தும் சின்மயப் பொருளே சிவம்! இந்த இரண்டுக்கும் இடையில் இயங்கிடும் உலகைக் காப்பது விஷ்ணு! அகிலம் இயங்கிட ஆதாரமாக விளங்கிடும் ஆதிசக்தி! இந்த கோட்பாடுகளிலும் நிலைபெறுபவன் ஐயன். சைவத்தில் சிவபுத்திரன் வைணவத்தில் ஹரி நந்தனன். சாக்தத்தில் அம்பாசுதன். கௌமார காணபத்யத்தில் குஹ கணேச சோதரன். சௌரத்திலோ அகிலாண்கோடி பிரம்மாண்ட நாயகன்.

ஐயப்ப வழிபாட்டில் திருநீறு

கார்த்திகையில் மாலை அணிந்து கடும்விரதம் மேற்கொண்டு மார்கழி நிறைவுற்று மகரஜோதியைக் காணச் செல்லும் ஒரு சீரிய வழிபாடு ஐயப்பன் வழிபாடு. இந்த வழிபாட்டில் கண்டிப்பாக 48 நாட்களாவது விரதம் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. சபரிமலையில் ஐயப்பன் அமர்ந்திருப்பதே தவக்கோலத்தில்தான். இந்த ஐயப்பனுக்கும் விபூதியைத் தவத்தின் பொருட்டு சாற்றுவது மரபாக உள்ளது. சபரிமலையில் விழாக்கால வழிபாடுகள் நிறைவுற்று நடையை அடைப் பதற்கு முன்னர், ஐயப்பனின் திருமேனியை திருநீற்றைக் கொண்டு நிரப்பி விடுவார்கள். 25 நாட்களுக்கு அந்தத் திருநீறு ஐயப்பனின் திருமேனியின் மீதே இருக்கும்.

மீண்டும் நடை திறக்கும்பொழுது அந்த விபூதி பக்தர்களுக்கு அருள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த விபூதிக்குத் ‘தவக்கோல விபூதி’ என்று பெயர். இந்தத் தவக்கோல விபூதி கிடைப்பது மிகப்பெரிய பேறாகும். ஏனெனில் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யும்கூட சுவாமிக்கு அபிஷேகம் செய்த உடனே அகற்றப்படுகிறது. ஆனால், இந்த விபூதி 25 நாட்கள் இறைவன் மீதே இருப்பதால் மிகவும் அருளாற்றல் நிறைந்ததாகும்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: ஐயப்ப வழிபாட்டில் திருநீறு appeared first on Dinakaran.

Tags : Thiruneeru ,Ayyappa ,Lord ,Shiva ,Somavara vratam ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்