×

நாட்டிலேயே முதல்முறையாக நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் ரோவர் கிராப்ட் படகு.. புயல், வெள்ள பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவும்!!

கோவை : நாட்டிலேயே முதல்முறையாக நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் ரோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த யூரோ டெக் சல்யூஷன் என்ற தனியார் நிறுவனம் டிரில்லிங் மிஷன், கிரைண்டிங் மிஷன் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை தயாரித்து 45த்திற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில், ரோவர் கிராப்ட் படகு ஒன்றை தயாரித்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் சூலூரில் உள்ள சின்ன குளத்தில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படை பாதுகாப்புடன் நடைபெற்றது.

நீர் மற்றும் நிலத்தில் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்திலும் பனி படர்ந்த இடங்களில் 100 கிமீ வேகத்திலும் செல்லும் வகையில் இந்த ரோவர் கிராப்ட் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த ரோவர் கிராப்ட், புயல், வெள்ளப் பாதிப்பு காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் கப்பற்படையின் கண்காணிப்பு பணிகளுக்காகவும் பயன்படுத்த முடியும். ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 25 லிட்டர் வரை எரிபொருள் செலவாகும் என கனடா தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தக நோக்கத்தை கடந்து பொதுமக்களின் தேவைக்காகவும் இதனை வடிவமைத்து இருப்பதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த ரோவர் படகு சோதனை ஓட்டத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

The post நாட்டிலேயே முதல்முறையாக நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் ரோவர் கிராப்ட் படகு.. புயல், வெள்ள பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவும்!! appeared first on Dinakaran.

Tags : KOWAI ,KOWA ,
× RELATED சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது