×

சங்கர நேத்ராலயா நிறுவனர் பத்ரிநாத் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை: சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனரும், தலைவருமான பத்ரிநாத் (83) வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத். சென்னையில் பிறந்த இவர் 1963ம் ஆண்டில், மெட்ராஸ் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்த இவர் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். 1978ம் ஆண்டில், மருத்துவர் பத்ரிநாத் சென்னையில் சங்கர நேத்ராலயா என்ற தொன்டு நிறுவனத்தை உருவாக்கி, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் லாப நோக்கற்ற கண் மருத்துவமனையை நிறுவினார். இங்கு தினசரி 1200 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, மேலும் தினசரி 100 அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகின்றன. இவர் கடந்த 1996ம் ஆண்டில் பத்மபூஷன் பெற்றார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் பத்ரிநாத் அவர்கள் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.

இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் ‘பத்மபூஷன்’ விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கர நேத்ராலயா மூலம் பத்ரிநாத் அவர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா அவர்கள் பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் அவர்களது மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு. எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: சங்கர நேத்ராலயாவின் தலைவர் பத்ரிநாத் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, பத்ரிநாத் மறைவுக்கு ஜி.கே.வாசன்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

The post சங்கர நேத்ராலயா நிறுவனர் பத்ரிநாத் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Sankara Nethralaya ,Badrinath ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,president ,Sankara Nethralaya Eye Hospital ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...