×

தெலங்கானா சென்னூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வீடு உட்பட 20 இடங்களில் ஐடி ரெய்டு: முன்னாள் அமைச்சர், எம்பி வீடுகளிலும் சோதனை

திருமலை: தெலங்கானாவில் சென்னூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வீடு உட்பட 20 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தெலங்கானா மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 30ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் அனைவரும் பிரசாரத்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தெலங்கானாவில் மீண்டும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். இம்முறை காங்கிரஸ் வேட்பாளர் ஜி.விவேக் வீட்டில் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாஞ்சிரியால் மாவட்டம், சென்னூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் என்ற ஜி.விவேக் போட்டியிடுகிறார். அங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்காரராக அறியப்படுகிறார். அவருக்கு மொத்தம் ரூ.606.66 கோடி மதிப்பு சொத்து உள்ளது. தேர்தலையொட்டி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் ஜி.விவேக்கிற்கும் அவரது மனைவிக்கும் ஏறத்தாழ ரூ.41.50 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜவின் முன்னாள் எம்பியான ஜி.விவேக் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நிலையில், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து களம் இறங்கியுள்ளார். இதற்கிடையில், நேற்று காலை முதல் சென்னூரில் உள்ள ஜி.விவேக்கின் வீடு, ஐதராபாத் சோமாஜிகுடாவில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது உறவினர்கள், முக்கிய ஆதரவாளர்களின் வீடுகள் என 20 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இதேபோல், முன்னாள் எம்பி பொங்குலெட்டி னிவாஸ், மகேஸ்வரம் காங்கிரஸ் வேட்பாளர் கிச்சன்நகரி லக்‌ஷ்மண், முன்னாள் அமைச்சர் ஜனா ஆகியோரது வீடுகளிலும் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜி.விவேக்கிற்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பணபரிமாற்றம் செய்த ரூ.8 கோடியை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்த நிலையில், தற்போது நடந்து வரும் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post தெலங்கானா சென்னூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வீடு உட்பட 20 இடங்களில் ஐடி ரெய்டு: முன்னாள் அமைச்சர், எம்பி வீடுகளிலும் சோதனை appeared first on Dinakaran.

Tags : Congress ,Telangana Sennur constituency ,Thirumalai ,Income Tax Departments ,Sennor Assembly Constituency Congress ,Telangana ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு