×

சேலம் பெரியார் பல்கலையில் நாளை மறுநாள் கவர்னர் பங்கேற்கும் விழாவை ஆசிரியர் சங்கங்கள் புறக்கணிப்பு: பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் அமைச்சருக்கு கடிதம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் (24ம் தேதி) நடக்கும் 22வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, பட்டங்களை வழங்குகிறார். இவ்விழாவை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு ஆகியவை இணைந்த, பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக குழுசர் பொன்முடிக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசுக்கு எதிரான செயல்பாடுகளும், முடிவுகளும் மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மேம்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்பதை சுட்டிக்காட்டிய பிறகும்,தவறான வழிநடத்துதல் தொடர்கிறது.

இப்போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக நிர்வாக முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெற்று, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மீது கவனம் ஈர்க்கவும், அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டியும்,பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு சார்ந்த ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும், வரும் 24ம் தேதி நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சேலம் பெரியார் பல்கலையில் நாளை மறுநாள் கவர்னர் பங்கேற்கும் விழாவை ஆசிரியர் சங்கங்கள் புறக்கணிப்பு: பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் அமைச்சருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Unions ,Salem Periyar University ,Salem ,Periyar University ,Governor ,RN ,Ravi ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...