×

தண்டவாளத்தை கடந்த 3 பேர் பலி வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆய்வுக்கு பின் கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மேம்பால பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, 2 மகள்கள் உள்பட மூன்று பேர் புறநகர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர். இதையடுத்து பொதுமக்கள் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, மேம்பால பணிகள் குறித்தும் தற்காலிகமாக பாதை அமைத்து தருவது குறித்தும் கலெக்டர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்து வட்டாட்சியர் சுரேஷ்குமார், பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் ரயில்வே அதிகாரிகள், வருவாய்த் துறையினரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது: வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். அதுபோல, ஏப்ரல் மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும். மேம்பாலம் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் டெண்டர் விடப்பட்டு 6 மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தண்டவாளத்தை கடந்த 3 பேர் பலி வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆய்வுக்கு பின் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Vepampatu ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...