×

இறுதிகட்டத்தில் பேச்சுவார்த்தை காசாவில் விரைவில் போர் நிறுத்தம்: ஹமாஸ் அறிவிப்பு

கான் யூனிஸ்: காசாவில் விரைவில் போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கூறி உள்ளார். பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையேயான போர் 7வது வாரமாக நீடிக்கிறது. இதுவரை இப்போரில் காசாவில் 13,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைகளை பதுங்குமிடமாக ஹமாஸ் பயன்படுத்துவதாக கூறி, ஒவ்வொரு மருத்துவமனையையும் சுற்றிவளைத்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று தெரிவித்துள்ளார்.  அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்த ஹமாஸ் படையினர் இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர் உட்பட 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல், ஹமாசுடன் கத்தார் மற்றும் அமெரிக்கா நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

தற்போது பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக கத்தார் வெளியுறவு அமைச்சரும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பியும் தெரிவித்துள்ளனர். ஹமாசுக்கு எதிரான போரில், பணயக் கைதிகளை பத்திரமாக மீட்பதே முதன்மையான பணி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நேற்று தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் 5 நாள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பிரிக்ஸ் தலைவர்கள் ஆலோசனை
இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்நிலையில், இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரம் குறித்து விவாதிக்க பிரிக்ஸ் தலைவர்கள் இடையே வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங், ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த அமைப்பில் இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இதனால் இக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

* லெபனானில் தாக்குதல்: 2 பத்திரிகையாளர் பலி
ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில் லெபனான் எல்லையில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் பெய்ரூட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல் மயாதீன் டிவி சேனலின் பத்திரிகையாளர்கள் 2 பேர் பலியாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான இந்த டிவி சேனலுக்கு இஸ்ரேல் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்த தாக்குதல் தங்கள் பத்திரிகையாளர்களை நேரடியாக குறிவைத்து நடத்தப்பட்டிருப்பதாக அல் மயாதீன் குற்றம்சாட்டி உள்ளது.

The post இறுதிகட்டத்தில் பேச்சுவார்த்தை காசாவில் விரைவில் போர் நிறுத்தம்: ஹமாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza ceasefire ,Hamas ,Khan Younis ,Ismail Haniyeh ,Gaza ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்