×

விதவையை திருமணம் செய்து மோசடி பெற்றோர் மிரட்டி 2வது திருமணம் செய்து வைத்ததாக வாலிபர் நாடகம்: சேர்ந்து வாழ 50 சவரன் கேட்டு நெருக்கடி; பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு -செல்வி தம்பதியின் மகள் நந்தினி (32). இவருக்கும் முனிக்குமார் என்பவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. 13 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 2019ல் உடல் நலக்குறைவு காரணமாக நந்தினியின் கணவர் முனிக்குமார் காலமானார். தனியார் கம்பெனியில் பணிபுரிந்த நந்தினி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்துள்ளார். இதனால் வங்கிக்கு அடிக்கடி சென்றுள்ளார். இந்நிலையில், கடன் வழங்கும் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் கார்த்திக் என்பவருடன் கடந்த ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, தனக்கு விதவைப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் ஆசை என்றும், பெற்றோர் ஏற்க மறுப்பார்கள் என்பதால் திருமணம் முடிந்த பிறகு பொறுமையாக சொல்லிக்கொள்கிறேன் என நந்தினியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 3.7.2023 அன்று திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநாகாத்தம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு 11.9.2023 அன்று திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தனது செலவுக்காக ரூ.3 லட்சம் வரை நந்தினியிடம் கார்த்திக் வாங்கி உள்ளார். திருமணமான ஒரே வாரத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்ற கார்த்திக், ஒரு வாரம் வீட்டிற்கு வராமல் இருந்ததால் நந்தினி அதிர்ச்சி அடைந்தார். பிறகு வீட்டுக்கு வந்த கார்த்திக், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறியதால் நந்தினி நம்பியுள்ளார்.

மேலும், பெற்றோர் தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி பூர்ணிமா என்ற பெண்ணுடன் 17.9.2023 அன்று திருமணம் செய்து வைத்துவிட்டனர். நான் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக இருவரும் கணவன் -மனைவியாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி வேலூரில் திருமணம் செய்த பூர்ணிமா என்ற பெண்ணின் தந்தை, அண்ணன் (வேலன்) மற்றும் பலர் ஒண்டிக்குப்பத்தில் வசித்து வந்த வீட்டிற்கு வந்து நந்தினியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கார்த்திக்கை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது 50 சவரன் நகை எனது பெற்றோருக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் நான் உன்னுடன் வாழ்வேன் என்று சொல்லிவிட்டு சென்றதால் நந்தினி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு, தன்னை பதிவு திருமணம் செய்துவிட்டு, வேறோரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டதும், வரதட்சணையாக 50 சவரன் கொடுத்தால் சேர்ந்து வாழ்வேன் என்று கூறிவிட்டு சென்ற கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு நந்தினி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த பூர்ணிமாவின் அண்ணன் வேலன் என்பவர் காவல் துறையில் பணியாற்றி வருவதால் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நந்தினியை தரக்குறைவாக விமர்சித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த நந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post விதவையை திருமணம் செய்து மோசடி பெற்றோர் மிரட்டி 2வது திருமணம் செய்து வைத்ததாக வாலிபர் நாடகம்: சேர்ந்து வாழ 50 சவரன் கேட்டு நெருக்கடி; பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : 50 ,Sawaran ,Nandini ,Babu-Selvi ,Manavalanagar, Ondikuppam ,Tiruvallur ,Munikumar ,
× RELATED பஸ்ஸில் பெண் தவற விட்ட 50 சவரன் தங்க நகை...