×

ஈரோடு சிப்காட் வளாகத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்: அறிவிப்பினையை வெளியிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு: ஈரோடு சிப்காட் வளாகத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (21.11.2023) வெளியிட்டார்கள்.

இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; முதலமைச்சர், தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றுகின்ற வகையில், முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்றைய தினம் (21.11.2023) ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் புதிய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆணை (G.O.(Ms) No.218 Date 20.11.2023) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பொது சுத்திகரிப்பு நிலையம் தினசரி 20.00 இலட்சம் லிட்டர் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. மேலும், மொத்த மதிப்பான ரூ.40.00 கோடியில் அரசின் பங்காக ரூ.20.00 கோடியும் மற்றும் சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பாக ரூ.20.00 கோடியும் வழங்குவதற்கும் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளனர். மேலும், தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு மட்டுமே கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அதே போல், கழிவுநீரை நிலத்தில் கண்டிப்பாக விடக்கூடாது. மேலும், காற்று மாசு அடைகின்ற வகையில் புகையோ, கழிவோ வெளியேறாமல் தொழிற்சாலைகள் பாரத்துக்கொள்ள வேண்டுமெனவும் சிப்காட் வளாகத்தில் தேங்கியிருக்கும் சுமார் 63,000 டன் கழிவுகளை இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு விரைவில் எடுத்து செல்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனுக்காக சிப்காட் வளாகத்தில் உள்ள நல்லான் ஓடை தூர்வாரி சுத்தப்படுத்தி மழைநீர் ஓடுகின்ற வகையில் பாதுகாக்கப்படும். மேலும், சிப்காட் வளாகத்தில் ஏற்கனவே மாசுபட்ட நிலத்தடி நீரை உறிஞ்சி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீர் எடுத்து சுத்தப்படுத்தப்படும். தேவையான இடத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மாசுபட்ட தண்ணீரை எடுத்து சுத்தப்படுத்தப்படும். அவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு வரும் தண்ணீர் மீண்டும் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும். மேலும், விவாசய நிலங்களும், நீர்நிலைகளும் பாதிக்கப்படாமல் விவசாயத்தினை பாதுகாப்பது நமது அனைவரின் கடமையாகும்.

அரசின் விதிமுறைகளை தொழிற்சாலைகள் முழுமையாக பின்பற்றிட வேண்டுமெனவும் மற்றும் மக்களின் நலனுக்காக அரசு அளிக்கின்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் நல்லமுறையில் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் நலனில் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட முதலமைச்சர் அவர்களுக்கு தங்களின் அன்பையும், ஆதரவையும் வழங்க வேண்டுமென தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, அமைச்சர் சு.முத்துசாமி, அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர். ப.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், அரசு அலுவலர்கள், தொழிற்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post ஈரோடு சிப்காட் வளாகத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்: அறிவிப்பினையை வெளியிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Erode Chipcat Complex ,Minister Assistant Minister ,Stalin ,Erode ,Erode Chipkot ,Erode Chipkot Campus ,Minister ,Udayaniti Stalin ,Dinakaran ,
× RELATED 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி...