×

பழங்குடியினரின் உரிமைகளை காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கும்: ராகுல் காந்தி உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுவதால், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் Vallabhnagar பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி; கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்தியா ஒற்றுமை யாத்திரை’ யில் லட்சக்கணக்கான மக்களுடன் நடந்தே சென்றேன். பாஜக பரப்பும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கமாக இருந்தது.

ஏனெனில் இது வெறுப்பின் நாடு அல்ல; அன்பும் சகோதரத்துவமும் கொண்ட நாடு. அதனால்தான் யாத்திரையின் போது ‘வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையைத் திறக்க வேண்டும்’ என்று கோஷம் போட்டோம். பாஜக ஏன் நாட்டில் வன்முறை, அச்சம் மற்றும் வெறுப்பை பரப்புகிறது? வெறுப்புக்குக் காரணம் வேலையின்மை மற்றும் பணவீக்கம். இந்த இரண்டு விஷயங்களிலிருந்தும் உங்கள் கவனத்தை திசை திருப்ப பாஜகவின் அமைப்பு வெறுப்பை பரப்புகிறது. ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு இந்தியாவின் செல்வம் கிடைத்துவிடுமோ என்று பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். பயப்படுகின்றன.

இந்தியாவின் செல்வம் கோடீஸ்வரர்களின் கைகளிலேயே இருக்க வேண்டும் என்றும். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்பக்கூடாது என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். உத்தரகாண்டில் சுரங்கங்களில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். ஆனால் ஊடகங்கள் 24 மணி நேரமும் கிரிக்கெட் பற்றி மட்டுமே பேசுகின்றன. தயவுசெய்து எங்கள் தொழிலாளர்களையும் ஊடகங்களில் காட்டுங்கள். அதேபோல, நரேந்திர மோடி, அதானிக்காக வேலை பார்ப்பதால், அவரை மட்டுமே ஊடகங்களில் காட்டப்படுகிறது.

மோடி ஜி அதானிக்கு GST பணத்தை அனுப்புகிறார். அதானி, மோடி ஜியின் முகத்தை ஊடகங்களில் காட்டுகிறார். இந்தியை மட்டும் கற்கவும்; ஆங்கிலம் கற்க வேண்டாம் என்றும் பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாஜக தலைவர்களிடம் கேட்டால் அவர்களின் குழந்தைகள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பது தெரிய வரும். ஏனென்றால், நல்ல வேலை கிடைக்க ஆங்கிலத்தில் பேசுவது அவசியம் என்பது பாஜக தலைவர்களுக்குத் தெரியும். ஆனால் பழங்குடியின இளைஞர்கள் காட்டில் மட்டுமே வாழ வேண்டும் என்று பாஜகவினர் விரும்புகிறார்கள்.

அதேசமயம் பழங்குடி இளைஞர்கள் பெரிய கனவுகளை கனவு கண்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் மோடி முன்பு தனது உரைகளில் உங்களை ‘வனவாசி’ என்று அழைத்தார். ஆனால் நான் மறுத்த பிறகு, ‘வனவாசி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார். பழங்குடியினரின் உரிமைகளை காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கும். இலவச கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றுக்கான உரிமையை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள் இவ்வாறு கூறினார்.

The post பழங்குடியினரின் உரிமைகளை காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கும்: ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Jaipur ,Rajasthan ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!